புரூக்ளின் பாலத்தில் மோதிய மெக்சிகன் கப்பல்: 2 பேர் பலி
புரூக்ளின் பாலத்தில் மோதிய மெக்சிகன் கப்பல்: 2 பேர் பலி
புரூக்ளின் பாலத்தில் மோதிய மெக்சிகன் கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்: வட அமெரிக்க நாடான மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாஹ்டெமோக் என்ற கப்பல், 277 பேருடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு கடந்த 13ம் தேதி வந்தது.
நல்லெண்ண அடிப்படையில் 15 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த கப்பல், நியூயார்க் நகரின் முக்கிய அடையாளமான புரூக்ளின் தொங்கு பாலத்தின் மீது நேற்று முன்தினம் இரவு மோதியது.
கப்பலின் உயரமான கொடி மரம், புரூக்ளின் பாலத்தின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், கப்பலில் பயணித்த இருவர் பலியாகினர்; ஊழியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஆடம்ஸ் தெரிவித்தார். பாலத்தின் மீது மோதியதில், கப்பலின் மூன்று கொடிக் கம்பங்கள் பலத்த சேதமடைந்தன.
பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த துாண்கள் சேதமடைந்த நிலையில், அதை சரி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விபத்தை தொடர்ந்து, பாலத்தில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதும் இயல்பு நிலை திரும்பியது.
புகழ்பெற்ற புரூக்ளின் பாலம், நியூயார்க் நகரின் முக்கியமான சுற்றுலா தலம், நாள்தோறும் இந்த பாலத்தின் மீது, ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன; ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர்.
நியூயார்க்கின் கிழக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம், 1883ல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய கப்பல், 297 அடி நீளமும், 40 அடி அகலமும் உடையது. இதன் பிரதான கொடிக்கம்பம், 160 அடி உயரம் உடையது. மன்ஹாட்டன் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய கப்பல், திசை மாறி புரூக்ளின் பாலத்தை நோக்கி சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 6ம் தேதி, மெக்சிகோவின் அகபுல்கோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் விபத்தில் சிக்கியதை அடுத்து, அதன் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.