சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா ஆதரவு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா ஆதரவு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா ஆதரவு
UPDATED : ஜூலை 27, 2024 05:25 PM
ADDED : ஜூலை 26, 2024 03:23 PM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவதற்கு, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன், 81, களமிறங்குவார் என கூறப்பட்டது. எனினும், வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்படும் அவர், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, சமீபத்தில் அறிவித்தார். மேலும், அதிபர் தேர்தலில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சி சார்பில், டிரம்பை எதிர்த்து களமிறங்க, கமலா ஹாரிசுக்கு அக்கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். எனினும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசு பொருளானது
இந்நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்சேல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் பராக் ஒபாமா வெளியிட்ட பதிவு:இந்த வார துவக்கத்தில் மிட்சேலும், நானும் எங்கள் தோழி கமலா ஹாரிசை அழைத்து ஆதரவை தெரிவித்தோம். அமெரிக்காவின் சிறந்த அதிபராக, கமலா ஹாரிஸ் வருவார் என, நம்புகிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அமெரிக்காவுக்கு நெருக்கடியாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.