ஜப்பான் நிலநடுக்கம்; 55 பேர் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம்
ஜப்பான் நிலநடுக்கம்; 55 பேர் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம்
ஜப்பான் நிலநடுக்கம்; 55 பேர் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம்
ADDED : ஜன 03, 2024 01:40 AM
வாஜிமாஜப்பானில், நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள், சாலைகள் சேதமடைந்தன.
கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் நேற்று முன்தினம் பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மின்சார நிலையம்
இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், புல்லட் ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் 4 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்து, இஷிகவாவின் முக்கிய நகரான வாஜிமாவை தாக்கின.
அங்குள்ள ஆற்றின் வழியாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. நிலநடுக்கம் ஓய்ந்த பிறகும் நுாற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர்.
நிலநடுக்கத்தின் போது வீடுகளுக்குள் இருந்த 55 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிஉள்ளன.
மேலும் பிரதான சாலைகள், 'மொபைல் போன்' கோபுரங்கள், மின்சார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இஷிகவாவில் பாதிப்பு அதிகம் இருப்பதால், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 1,000 ராணுவ வீரர்களை மீட்பு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பள்ளிகள், சமூதாய கூடங்கள், கூட்ட அரங்குகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
கவலை
இந்நிலையில், ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நேற்று காலை விலக்கி கொள்ளப்பட்டன. நேற்று பிற்பகலில் இருந்து பல இடங்களில் புல்லட் ரயில் சேவையும் துவங்கியது.
ஜப்பான் நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கவலை தெரிவித்தனர். ஜப்பான் மக்களுக்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் கூறினார்.