Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ டிரம்ப் இல்லாததால் ஜி - 7 மாநாடு தோல்வி: தலைவர்கள் பேசினர், ஆனால் முடிவு இல்லை

டிரம்ப் இல்லாததால் ஜி - 7 மாநாடு தோல்வி: தலைவர்கள் பேசினர், ஆனால் முடிவு இல்லை

டிரம்ப் இல்லாததால் ஜி - 7 மாநாடு தோல்வி: தலைவர்கள் பேசினர், ஆனால் முடிவு இல்லை

டிரம்ப் இல்லாததால் ஜி - 7 மாநாடு தோல்வி: தலைவர்கள் பேசினர், ஆனால் முடிவு இல்லை

ADDED : ஜூன் 19, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
கனனாஸ்கிஸ்:வட அமெரிக்க நாடான கனடாவில், ஜி -7 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒருநாள் முன்னதாகவே, திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய உலகளாவிய பிரச்னைகள் தொடர்பாக இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஒற்றுமை இல்லை

குறிப்பாக, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர், இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக விவாதிக்க திடமிடப்பட்டது. இது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், டிரம்ப் முன்னதாகவே வெளியேறியதால், மற்ற ஆறு நாடுகளின் தலைவர்கள் இவை தொடர்பாக விவாதித்தனர். ஆனால், கூட்டறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை.

இதில் இருந்து, இந்தப் பிரச்னைகளில், இந்த வளர்ந்த நாடுகள் இடையே ஒற்றுமை இல்லாதது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பான தீர்மானத்தில், 'பிராந்தியத்தில் ஈரான் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் இரு தரப்பும் தாக்குதலை குறைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எந்த நிலையிலும், ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

புறப்படுவதற்கு முன்பாக, இந்த தீர்மானத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு சென்றுள்ளார். இதில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மற்ற ஆறு நாடுகளும் இருந்தது தெளிவாகிறது.

ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் உள்ளார். ஆனால், மற்ற ஆறு நாடுகளும், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இந்த உச்சி மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அவருடன், ஆறு தலைவர்களும் தனித்தனியாக பேசினர்.

கூட்டறிக்கை

ஜெலன்ஸ்கி, டிரம்பை சந்தித்து பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக கூட்டறிக்கையில் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை.

வேலைகளில் செயற்கை நுண்ணறிவு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பது, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், உலகளவில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ள போர்கள் மற்றும் பிற முக்கிய பிரச்னைகளில், இந்த அமைப்பில் ஒற்றுமை, ஒருமித்த கருத்து இல்லை என்பதையே, மாநாட்டின் கூட்டறிக்கை பிரதிபலித்துள்ளது.

ஒரு பக்கம் பரஸ்பர வரி போரில், இந்த அமைப்பில் உள்ள நாடுகளுடன் அமெரிக்காவுக்கு மோதல் உள்ளது.

மறுபக்கம், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் போர்களில், மற்ற ஆறு நாடுகளுடன் அமெரிக்காவுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது உள்ளிட்டவையே, டிரம்ப் முன்னதாக புறப்பட்டுச் சென்றதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜி - 7 எனப்படும் வளர்ந்த நாடுகள் குழுவில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us