Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறையில் அடைக்க உத்தரவு

தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறையில் அடைக்க உத்தரவு

தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறையில் அடைக்க உத்தரவு

தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறையில் அடைக்க உத்தரவு

ADDED : செப் 09, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
பாங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்று ஆறு மாதம் மருத்துவமனையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், அவரை ஓராண்டு சிறையில் அடைக்கும்படி, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்தவர் தக்சின் ஷினவத்ரா. அவரது ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நலத்திட்டங்களில் ஊழல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

கடந்த 2006ல் அவரது ஆட்சிக்கு எதிராக நடந்த ராணுவ புரட்சியால் அவர் பதவியை விட்டு விலகி, வெளிநாடு தப்பினார். கடந்த, 2008ல் மீண்டும் தாய்லாந்துக்கு திரும்பி தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள முயன்றார்.

அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. சிறையில் அடைக்க முயன்றனர். இதனால் மீண்டும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர், கடந்த 2023ல் நாடு திரும்பினார்.

பாங்காக் வந்து இறங்கியதும், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்க்கோர்ன் ஓராண்டாக குறைத்தார். உடல்நல பாதிப்பு என கூறி 6 மாதங்கள் மருத்துவமனையில் கழித்தார். அதன் பின் 2024ல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தக்சின் ஷினவத்ராவின் தண்டனை சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், 'மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இல்லை.

இது சிறை வீதிமீறல். தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்படாததை காட்டுகிறது. அவர் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என நேற்று உத்தரவிட்டனர்.

இவருடைய மகள் பேடோங்டார்ன் ஷினவத்ரா, 2024 ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை பிரதமராக இருந்தார். நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us