விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார் குரோஷியா பிரதமர்
விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார் குரோஷியா பிரதமர்
விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார் குரோஷியா பிரதமர்

புதுடில்லி: கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடான குரோஷியா எசென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் விமான நிலையம் வந்து வரவேற்றார்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக கடந்த 15ம் தேதி சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார். விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, அந்நாட்டின் உயரிய விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்தப்பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, நேற்று கனடா சென்றார். அங்கு ஜி 7 மாநாட்டில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து கனடா பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை மோடி சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர், ஐரோப்பிய நாடான குரோஷியாவின் ஜாக்ரெப் நகருக்கு சென்றடைந்தார். அங்கு, விமான நிலையம் வந்த அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச், மோடியை வரவேற்றார். குரோஷியாவுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: குரோஷியாவின் ஜாக்ரெப் நகர் வந்தடைந்தேன். ஐரோப்பியாவின் மதிப்பு மிக்க கூட்டாளியான குரோஷியாவிற்கு வந்த முதல் பிரதமர் என்பதன் மூலம் இப்பயணம் சிறப்பானதாக மாறுகிறது. என்னை விமான நிலையம் வந்து வரவேற்ற குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சிற்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
குரோஷியா அதிபர் ஜோரன் மிலன்நோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரை சந்திக்கும் பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.