சுவாமி நாராயணன் கோவிலுக்கு எதிரான புகார் முடித்து வைப்பு
சுவாமி நாராயணன் கோவிலுக்கு எதிரான புகார் முடித்து வைப்பு
சுவாமி நாராயணன் கோவிலுக்கு எதிரான புகார் முடித்து வைப்பு
ADDED : செப் 20, 2025 07:48 AM

நியூஜெர்சி: அமெரிக்காவில் உள்ள, 'பாப்ஸ்' எனப்படும், சுவாமி நாராயணன் கோவிலில் ஜாதி பாகுபாடு, தொழிலாளர் சுரண்டல் நடப்பதாக எழுந்த புகார் நான்கு ஆண்டு விசாரணைக்கு பின் நீதித்துறையால் முடித்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணம் ராபின்ஸ்வில் என்ற இடத்தில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு எதிராக ஆறு இந்திய தொழிலாளர்கள் ஜாதி பாகுபாடு மற்றும் தொழிலாளர் சுரண்டல் குற்றச்சாட்டுகளுடன் 2021ல் வழக்கு தொடர்ந்தனர்.
'நல்ல சம்பளம் என வாக்குறுதி அளித்து அழைத்து வந்து, மாதம் 40,000 ரூபாய் மட்டுமே வழங்கினர். வாரத்துக்கு 80 மணிநேரம் வேலை வாங்கினர். பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து கொண்டனர்' என மனுவில் கூறியிருந்தனர்.
இதை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் கோவிலில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், சமீபத்தில் நியூஜெர்சி மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இந்த தகவலை சுவாமி நாராயணன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. என்ன காரணத்துக்காக வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது என்ற விபரத்தை குறிப்பிடவில்லை.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 'சுவாமி நாராயணன் கோவில் அமைதி, சேவை, பக்தியின் இடம். - அனைத்து தரப்பு பக்தர்களின் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தன்னார்வ சேவையால் இக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, அமெரிக்க அரசின் முடிவை வரவேற்கிறோம்' என கூறியுள்ளனர்.