பிரதமர் மோடி பேச்சுக்கு சீனா பாராட்டு
பிரதமர் மோடி பேச்சுக்கு சீனா பாராட்டு
பிரதமர் மோடி பேச்சுக்கு சீனா பாராட்டு

பீஜிங்: இந்திய - சீன உறவு குறித்து நேர்மறையான கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு, சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 2020ல் லடாக் எல்லையில் நடந்த மோதலுக்குப் பின், இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசுகையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான சந்திப்புக்கு பின், இந்திய - சீன எல்லையில் இயல்புநிலை திரும்பி விட்டதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறாமல் பார்த்துக் கொள்வதையும், கருத்து வேறுபாட்டை விட பேச்சை விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மோடியின் இந்த பேச்சை சீனா பாராட்டி உள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மவோ நிங் கூறியதாவது: இந்திய - சீன உறவு, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. இருதரப்பும் நட்பு ரீதியான பரிமாற்றங்களைப் பராமரித்து வருகின்றன. வளர்ச்சியையும், புத்துயிர் பெறுவதையும் துரிதப்படுத்தி வருகின்றன.
ஒருவருக்கொருவர் தங்கள் வெற்றியை புரிந்து ஆதரவு அளித்து வருகின்றன. இது, 280 கோடி மக்களின் நலன் சார்ந்தது. உலகளாவிய தெற்கு வலுவாகவும், உலக அமைதிக்கு உகந்ததாகவும் வளரும் வரலாற்றுப் போக்கைப் பின்பற்றுகிறது.
இருநாடுகளும் ஒருவருக்கொருவர் வெற்றிக்கு பங்களிக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இருதரப்பும் நட்புடன் இணைந்து பணியாற்றுவதே நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு. இரு தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான பொதுவான புரிதல்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.
டிராகன் - யானை நடனம் தான், இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையேயான சரியான தேர்வு. இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவின் கலாசார சின்னமாக டிராகனும், இந்தியாவின் கலாசார சின்னமாக யானையும் கருதப்படுகின்றன. இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதற்காக, மாவோ நிங், இந்த விஷயத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.