புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி: லண்டனில் குவிந்த 1.50 லட்சம் பேர்
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி: லண்டனில் குவிந்த 1.50 லட்சம் பேர்
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி: லண்டனில் குவிந்த 1.50 லட்சம் பேர்
ADDED : செப் 15, 2025 12:39 AM

லண்டன்: பிரிட்டனில் நடந்த புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில், 26 போலீசார் காயமடைந்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' எனும் பெயரில் லண்டனில் பேரணி நடந்தது.
இப்பேரணியில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசாரின் எதிர்பார்ப்பை விட கூட்டம் அதிகளவில் கூடியிருந்தது.
இப்பேரணிக்கு போட்டியாக, 'பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு' என்ற பெயரில் 'ஸ்டண்ட் அப் டு ரேசிசம்' என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு எதிர் போராட்டமும் நடைபெற்றது. இதில் 5,000 பேர் வரை கலந்துகொண்டனர். இந்த இரு குழுக்களும் மோதலில் ஈடுபட்டுவிடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பல போலீஸ்காரர்களை, போராட்டக்காரர்கள் பாட்டிலால் குத்தியதுடன், பாட்டில் உள்ளிட்ட சில பொருட்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதல்களில், 26 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
'பேச்சு சுதந்திர விழா' என விளம்பரப்படுத்தப்பட்ட இப்பேரணி, குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகளையும், தேசியவாத கருப்பொருளையும் மையமாகக் கொண்டிருந்தது. பிரான்சின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான எரிக் செம்மூர் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.