Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவித்தது நேபாளம்

போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவித்தது நேபாளம்

போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவித்தது நேபாளம்

போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவித்தது நேபாளம்

UPDATED : செப் 14, 2025 07:26 PMADDED : செப் 14, 2025 03:15 PM


Google News
Latest Tamil News
காத்மாண்டு : நேபாளத்தில் சமீபத்தில் நடந்த இளம் தலைமுறையினரின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை, 'தியாகி'கள் என அறிவிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படும் என, அந்நாட்டின் தற்காலிக பிரதமர் சுசீலா கார்கி அறிவித்து உள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் முன்னணி சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததை தொடர்ந்து, கடந்த வாரம் அங்கு நாடு முழுதும் 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து, பார்லிமென்ட், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. இதையடுத்து, அந்நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கியை இடைக்கால பிரதமராக தேர்வு செய்து, அந்நாட்டு அதிபர் ராம்சந்திர பவுடேல் அறிவித்தார்.

இதன்படி, சுசீலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றார். அதன்பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்நாட்டின் பார்லிமென்டுக்கு வருகிற மார்ச் 5ம் தேதி முறைப்படி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சுசீலா உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் உள்ள சிங்கா தர்பாரில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முறைப்படி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், அனைத்து அமைச்சகங்களின் தலைமை செயலர்கள் மற்றும் செயலர்களுக்கான கூட்டத்தை கூட்டினார். மேலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் பேசப்பட்டது.

இளம் தலைமுறையினரின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்தார். மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். காயமடைந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

போராட்டங்களின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான அறிக்கைகளை தயாரித்து வழங்குமாறு, அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரத்தை அனுபவிக்க வரவில்லை

அரசு அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டங்களின்போது, நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி கூறியதாவது: வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரிக்கப்படும். நானும், என் குழுவும் இங்கு அதிகாரத்தை அனுபவிக்க வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்க மாட்டோம். புதிய பார்லிமென்டிடம் பொறுப்பை ஒப்படைப்போம். உங்கள் ஒத்துழைப்பின்றி நாங்கள் இதில் வெற்றி பெற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us