அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசுக்கு பரக் ஒபாமா ஆதரவு தராதது ஏன்?
அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசுக்கு பரக் ஒபாமா ஆதரவு தராதது ஏன்?
அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசுக்கு பரக் ஒபாமா ஆதரவு தராதது ஏன்?
ADDED : ஜூலை 26, 2024 12:19 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் அதிபர் பரக் ஒபாமா ஆதரவு தெரிவிக்காததற்கான காரணம் குறித்து வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அட்லாண்டாவில் நடந்த பிரசாரம் தொடர்பான விவாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். மேலும், அவருடைய உடல்நிலையும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர்.
நெருக்கடி அதிகரித்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். மேலும், கட்சியின் வேட்பாளராக, துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், 19 - 22ல் சிகாகோவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் அதிபர் பரக் ஒபாமா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்.
இது தொடர்பாக, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜோ பைடன் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், டொனால்டு டிரம்பை, கமலா ஹாரிசால் வெற்றி கொள்ள முடியாது என்று, பரக் ஒபாமா நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பைடனை வெளியேற்றுவதற்காக ஒபாமா முயன்றதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரிசோனா எம்.பி., மார்க் கெல்லியை அதிபர் வேட்பாளராக நிறுத்த அவர் விரும்பினார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடனை விமர்சித்து, பிரபல நடிகர் ஜார்க் க்ளூனி கட்டுரை எழுதியதும், ஒபாமாவின் இந்த முயற்சியின் ஒரு பகுதியே என, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்தில், என்.பி.சி., நியூஸ் என்ற தனியார் டிவி, கமலா ஹாரிஸ் மற்றும் பராக் ஒபாமா இடையே நல்ல நட்பு உள்ளதாகவும், விரைவில் அவர் தன் ஆதரவை தெரிவிப்பார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஒபாமா பிரசாரம் செய்வது குறித்து பேசப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாட்டை சிதைத்து விடுவார்!
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஜோ பைடனின் அனைத்து மோசமான நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருந்தவர் கமலா ஹாரிஸ். அவர் ஒரு தீவிர இடதுசாரி, அவர் அதிபரானால், நாட்டை சிதைத்து விடுவார். அந்த வாய்ப்பை தர மாட்டேன்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர், குடியரசு கட்சி
பதவி முக்கியமல்ல!
பொது வாழ்க்கையில் நான் நீண்ட காலம் இருந்துள்ளேன். நாட்டை வலுப்படுத்தும் ஜோதியை, இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க விரும்பினேன். அதனால்தான், அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன். ஜனநாயகத்தை காப்பாற்றுவதே முக்கியம்; பதவிகள் அல்ல.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர், ஜனநாயக கட்சி