குவைத்தில் மத்திய இணை அமைச்சர் வரதன் சிங்: காயமடைந்த இந்தியர்களை சந்தித்து ஆறுதல்
குவைத்தில் மத்திய இணை அமைச்சர் வரதன் சிங்: காயமடைந்த இந்தியர்களை சந்தித்து ஆறுதல்
குவைத்தில் மத்திய இணை அமைச்சர் வரதன் சிங்: காயமடைந்த இந்தியர்களை சந்தித்து ஆறுதல்
UPDATED : ஜூன் 13, 2024 08:26 PM
ADDED : ஜூன் 13, 2024 01:52 PM

குவைத் சிட்டி: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயம் அடைந்த 6 இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து, இன்று (ஜூன் 13) குவைத்திற்கு மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சென்றடைந்தார். பின்னர் அவர், காயமடைந்த 6 இந்தியர்களை மருத்துவமனையில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். 6 இந்தியர்களை சந்தித்த, புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த கீர்த்தி வரதன் சிங், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
நிதி உதவி மற்றும் வேலைவாய்ப்பு : குவைத் நிறுவனம் உறுதி
தீ விபத்தில் பலியான குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என குவைத் என்.பி.டி.சி நிறுவனம் உறுதி அளித்து உள்ளது எனவும், மேலும் பலியான குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.8 லட்சம் வழங்கப்படும் எனவும் சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.