Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! 'கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?'

அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! 'கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?'

அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! 'கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?'

அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! 'கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?'

ADDED : ஜூன் 23, 2024 05:41 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அட்லாண்டா : அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தில், கிறிஸ்துவர்களின் 10 கட்டளைகளை பள்ளிகளில் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கான முதல் படியா என்ற கேள்வி, சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.

அமெரிக்காவில், 34 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில், 7-0 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக உள்ளனர். இதில் பல பிரிவினரும் அடங்குவர். இதைத் தவிர, 21 சதவீதம் பேர் எந்த மதத்தையும் சாராத நாத்திகவாதிகளாக உள்ளனர்.

கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், அமெரிக்கா கிறிஸ்துவர்கள் நாடாக பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில், இங்குள்ள லுாசியானா மாகாணத்தில், கிறிஸ்துவ மதம் தொடர்பான பல மசோதாக்கள் சமீபகாலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மூன்றாம் பாலினத்தவர்களை, அவர்கள் பிறப்பு சான்றிதழின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். பொதுப்பள்ளிகளில், சாப்ளின்கள் எனப்படும் மத வகுப்புகள் போதிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஒப்புதல்


இந்நிலையில், கிறிஸ்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, '10 கமாண்ட்மென்ட்ஸ்' எனப்படும், 10 கட்டளைகளை, அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்படும் முதல் மாகாணமாக லுாசியானா உள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்காவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கான முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த மாகாணத்தில் குடியரசுக் கட்சியினர்தான், 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பான்மையினராக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர். எட்டு ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் ஜான் பெல் எட்வர்ஸ் கவர்னராக இருந்தார். கிறிஸ்துவ மதத்தை முன்னிறுத்தும் மசோதாக்களை, தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அவர் நிராகரித்து வந்தார்.

இந்நிலையில் ஜெப் லாண்ட்ரி, கடந்தாண்டு கவர்னராக வந்தார். வழக்கறிஞரான இவர், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் ஆஜரானவர்.

தீவிர மதப்பற்றாளரான இவர், கவர்னரான பின், அங்கு, கிறிஸ்துவ மதம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது, 10 கட்டளைகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் எழுதி வைப்பதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

கருக்கலைப்பு செய்யும் மருந்துகளை, அபாயகரமான பொருட்களாக அறிவிக்கும் மசோதாவை அவர் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தினார். இதிலும், நாட்டில் முதல் மாகாணமாக லுாசியானா உள்ளது.

''கிறிஸ்துவ பழமைவாதிகள், நீண்ட காலமாக இந்த மாகாணத்தை கிறிஸ்துவ மாகாணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கவர்னராக, ஜெப் லாண்ட்ரி பதவியேற்றதும், அவர்களுடைய முயற்சிகள் தீவிரமாயின,'' என, லுாசியானா மாகாண பல்கலை அரசியல் அறிவியல் பேராசிரியர் ராபர்ட் ஹோகன் கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் பல மாகாணங்களில், 10 கட்டளைகளை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல் முறையாக லுாசியானாவில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்ப்பு


ஓக்லஹோமா, மிசிசிபி, மேற்கு விர்ஜினியா மாகாணங்களிலும், கடந்த ஆண்டு இதுபோன்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன; ஆனால், நிராகரிக்கப்பட்டன.

அரிசோனா மாகாணத்தில், 10 கட்டளைகளை பள்ளிகளில் வைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோலவே, ஜார்ஜியாவிலும் மாகாண சட்டசபையில் மசோதா தோல்வி அடைந்தது.

லுாசியானாவைத் தொடர்ந்து இதுபோன்ற மசோதாக்களை மற்ற மாகாணங்களிலும் நிறைவேற்ற முயற்சிகள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் பிரதிநிதிகளுக்கான தேசிய சங்கம் இதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளது.

அதே நேரத்தில், இதுபோன்ற மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது. நாட்டை, கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக, எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

''லுாசியானா அரசியல்வாதிகள், கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியை மட்டும் மேற்கொள்ளவில்லை. மக்கள் பணத்தை வைத்து பள்ளிகளிலும், கிறிஸ்துவத்தை கட்டாயமாக்கப் பார்க்கின்றனர்,'' என, அரசு மற்றும் சர்ச்சுகள் இடையேயான இணைப்பை எதிர்க்கும் அமெரிக்கர்கள் என்ற அமைப்பின் தலைமை நிர்வாகி ராச்சல் லாசர் கூறியுள்ளார்.

இதுபோல பல அமைப்புகளும், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us