ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த ஆதரவாளர். வெற்றி!
ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த ஆதரவாளர். வெற்றி!
ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த ஆதரவாளர். வெற்றி!
ADDED : ஜூலை 07, 2024 02:23 AM

டெஹ்ரான் : ஈரான் அதிபர் தேர்தலில், டாக்டரும், நீண்டகாலம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான மசூத் பெசஸ்கியான், 69, வெற்றி பெற்றார். இதையடுத்து, ஈரானில் பின்பற்றப்படும் பழமைவாத நடைமுறைகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
மேற்கு ஆசிய நாடான ஈரானின் அதிபராக இருந்த முகமது ரைசி, கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் நடந்த தேர்தலில், மசூத் பெசஸ்கியான் முன்னிலை பெற்றார். ஆனாலும், அந்த நாட்டின் சட்டத்தின்படி, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 50 சதவீதம் பெற்றால் மட்டுமே அதிபராக முடியும்.
பொருளாதார தடை
அதன்படி, அந்தத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பெசஸ்கியான் மற்றும் தீவிர மதப்பற்றாளரான சயீத் ஜலிலி இடையே, இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று, பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் மோதல்கள் மற்றும் மற்ற சூழ்நிலைகளுக்கு இடையே, ஈரானை வழிநடத்தும் பொறுப்பு பெசஸ்கியானுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, ஈரான் செயல்பட்டு வருகிறது. மேலும், அந்த பிராந்தியத்தில் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
கடந்த, 2018ல் அணுசக்தி தொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறியது.
இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் பொருட்களைத் தவிர, யுரேனியமும் ஈரானில் அதிகம் உள்ளது. அணுசக்தி உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் யுரேனியத்தை, அணு ஆயுதம் செய்வதற்கு ஏற்ப, ஈரான் மேம்படுத்தி வருகிறது.
இது, உலக நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே உள்நாட்டிலும் பொருளாதார பாதிப்பு உட்பட பல விஷயங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான பெசஸ்கியான், நாட்டை எப்படி வழி நடத்திச் செல்ல உள்ளார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில், பெண்கள் வெளியில் செல்லும்போது தலை மற்றும் முகத்தை மறைக்கும், 'ஹிஜாப்' அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கடந்தாண்டு பெரும் போராட்டம் வெடித்தது.
இந்த விஷயத்தில், பெண்களுக்கு ஆதரவாகவும், தான் ஆட்சிக்கு வந்தால், இந்த விதிமுறைகளை தளர்த்துவதாகவும் பெசஸ்கியான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை தவிர்க்க, வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் பெசஸ்கியால் ஆர்வமாக உள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை, எண்ணெய் தேவைகளுக்கு ஈரானின் உதவி தேவை. ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தக ரீதியில் நட்புறவு உள்ளது.
புதிய முதலீடு
அது தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. மேலும் புதிய முதலீடுகளுக்கான நீண்டகால ஒப்பந்தமும் சமீபத்தில் செய்யப்பட்டுள்ளது.
வணிக மற்றும் சர்வதேச அரசியல் ரீதியில் இந்தத் துறைமுகம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் திட்டமும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானைப் பொறுத்தவரை, அங்கு அனைத்து முடிவுகளையும் எடுப்பது, உயர் மதத் தலைவரான அயதுல்லா அலி கொமோனி தான். மேலும், தற்போது அரசு மற்றும் அரசியலில் முக்கிய இடங்களில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், தீவிர மதப்பாற்றாளர்களே.
அதனால், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கை உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.