ADDED : ஜூன் 11, 2024 01:40 AM
இஸ்லாமாபாத், மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் தலைவர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரும், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் விடுத்துள்ள வாழ்த்து செய்தி:
மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சமீபத்திய தேர்தலில் உங்கள் கட்சி பெற்றுள்ள வெற்றி, மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வெறுப்பை நம்பிக்கையாக மாற்றுவோம்.
தெற்காசியாவின் 200 கோடி மக்களின் தலையெழுத்தை மாற்ற இந்த நல்வாய்ப்பை பயன்படுத்துவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.