Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக அறிவிக்க ஜனநாயக கட்சிக்குள் எதிர்ப்பு

ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக அறிவிக்க ஜனநாயக கட்சிக்குள் எதிர்ப்பு

ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக அறிவிக்க ஜனநாயக கட்சிக்குள் எதிர்ப்பு

ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக அறிவிக்க ஜனநாயக கட்சிக்குள் எதிர்ப்பு

UPDATED : ஜூலை 19, 2024 05:57 AMADDED : ஜூலை 19, 2024 05:55 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் பெயரை அறிவிக்க கட்சிக்குள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முறைப்படி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மாகாணங்கள் இடையே நடத்தப்பட்ட தேர்தல்களில், அவருக்கு பெரும்பான்மை கிடைத்தது.

சிகாகோவில், அடுத்த மாதம், 19 - 22ல் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி வாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார். இதைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, அவருடைய கட்சியில் பலரும் குரல் கொடுக்கத் துவங்கி விட்டனர். கட்சியின் பல மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில், கலிபோர்னியா எம்.பி.,யும் கட்சியின் வலுவான தலைவருமான ஆடம் ஸ்கிப் இணைந்துள்ளார். 'தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில், ஜோ பைடன் தானாக போட்டியில் இருந்து விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கட்சி வேட்பாளரை அறிவிக்கும் மாநாடுக்காக காத்திராமல் முன்னதாகவே அறிவிப்பது குறித்து கட்சியில் ஆலோசனை நடந்து வருகிறது. இதன்படி, ஆன்லைன் அல்லது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஓட்டுப்பதிவு நடத்தி, அதிபர் வேட்பாளரை முறையாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், ஆக., 7ம் தேதிக்குள் இந்த முறையில் வேட்பாளரை அறிவிப்பது குறித்து, கட்சியின் விதிகளை உருவாக்கும் தேசிய கமிஷன் ஆலோசித்து வருகிறது.

மூன்றாவது முறையாக கொரோனா

அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என, சொந்த கட்சியினரே குரல் கொடுத்து வரும் நிலையில், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு லாஸ் வேகாஸ் பிரசாரத்தில் பைடன் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.அப்போது அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் இருமல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதை தொடர்ந்து டெலாவரில் உள்ள கடற்கரை இல்லத்துக்கு சென்ற அதிபர் பைடன், அங்கு தனிமைபடுத்திக் கொண்டார்.அங்கிருந்தபடி சில நாட்களுக்கு அலுவல்களை கவனிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us