மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது பெருமை: முகமது முய்சு
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது பெருமை: முகமது முய்சு
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது பெருமை: முகமது முய்சு
ADDED : ஜூன் 09, 2024 12:07 AM

மாலே: 'பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்' என, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதை தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி, நம் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவும் பங்கேற்கிறார்.
இவர், கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை அதிபர் முகமது முய்சு பெருமையாகக் கருதுகிறார்.
'இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்த அவர் உறுதிபூண்டுள்ளார். இந்த மிகப்பெரிய விழாவுக்கு தன்னை அழைத்த பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.