Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை துப்பாக்கி சூட்டில் சிக்கிய தலைவர்கள்

ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை துப்பாக்கி சூட்டில் சிக்கிய தலைவர்கள்

ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை துப்பாக்கி சூட்டில் சிக்கிய தலைவர்கள்

ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை துப்பாக்கி சூட்டில் சிக்கிய தலைவர்கள்

UPDATED : ஜூலை 15, 2024 02:39 AMADDED : ஜூலை 15, 2024 02:37 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உருவான, 1776 ஜூலை 4 முதல், அந்நாட்டு அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த பார்வை:

1865 ஏப்., 14: அமெரிக்காவின் 16வது அதிபரான ஆபிரகாம் லிங்கன், தன் மனைவியுடன், வாஷிங்டனில் உள்ள போர்டு தியேட்டரில், காமெடி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, ஜான் வில்க்ஸ் பூத் என்பவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

கறுப்பின உரிமைகளுக்காக போராடியதற்காக, ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1865 ஏப்., 26ல், வர்ஜீனியாவின் பவுலிங் கிரீன் அருகே ஒரு கொட்டகையில் மறைந்திருந்த ஜான் வில்கஸ் பூத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1881 ஜூலை 2: அமெரிக்காவின் 20வது அதிபரான ஜேம்ஸ் கார்பீல்டு, வாஷிங்டனில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்து சென்ற போது, சார்லஸ் கிட்டோ என்பவரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர், 1881 செப்., 19ல் உயிரிழந்தார்.

இவர், அமெரிக்க அதிபராக ஆறு மாதங்கள் மட்டுமே பதவி வகித்தார். 1882 ஜூனில், சார்லஸ் கிட்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு துாக்கிலிடப்பட்டார்.

1901 செப்., 6: அமெரிக்காவின் 25வது அதிபரான வில்லியம் மெக்கின்லி, நியூயார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின், மக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர், 1901 செப்., 14ல் உயிரிழந்தார். டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த, 28 வயது இளைஞர் லியோன் ஷோல்கோஸ், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக ஒப்புக் கொண்டார். 1901 அக்., 29ல், மின்சார நாற்காலியில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1933 பிப்ரவரி: அமெரிக்காவின் 32வது அதிபரான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மியாமியில், திறந்த காரில் மக்களிடையே பேசினார். அப்போது, அவரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

எனினும், சிகாகோ மேயர் அன்டன் செர்மாக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், குய்செப் ஜங்காரா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1950 நவம்பர்: அமெரிக்காவின் 33வது அதிபரான ஹாரி எஸ்.ட்ரூமன், வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள பிளேர் ஹவுஸில் தங்கியிருந்த போது, ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அதிபர் ட்ரூமன் காயமடையவில்லை. இத்தாக்குதலில், மூன்று போலீசார், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

1963 நவம்பர்: அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் எப்.கென்னடி, தன் மனைவி ஜாக்குலின் கென்னடியுடன் டல்லாஸ் நகருக்கு சென்ற போது, மர்ம நபரால்​சுட்டுக் கொல்லப்பட்டார்.

சில மணி நேரங்களில், லீ ஹார்வி ஓஸ்வால்டு என்பவரை போலீசார் கைது செய்தனர். இரு நாட்களுக்குப் பின், போலீஸ் தலைமையகத்தில் இருந்து கவுண்டி சிறைக்கு ஓஸ்வால்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, டல்லாஸ் நைட் கிளப் உரிமையாளர் ஜாக் ரூபி அவரை சுட்டுக் கொன்றார்.

1975: அமெரிக்காவின் 38வது அதிபரான ஜெரால்டு போர்டை கொலை செய்ய இரு முறை முயற்சி செய்யப்பட்டது. எனினும், இந்த தாக்குதல்களில் இருந்து அவர் தப்பினார்.

1981 மார்ச்: அமெரிக்காவின் 40வது அதிபரான ரொனால்ட் ரீகன், வாஷிங்டன் டி.சி.,யில் மோட்டார் அணிவகுப்புக்கு நடந்து சென்ற போது,​ கூட்டத்தில் இருந்த ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார்.

2005: அமெரிக்காவின் 43வது அதிபரான ஜார்ஜ் புஷ், கிழக்கு ஐரோப்பிய நாடான ஜார்ஜியா தலைநகர் திபிலிசியில், அந்நாட்டு அதிபர் மிகைல் சாகாஷ்விலி உடன் பேரணியில் பங்கேற்றார். அப்போது அவரை நோக்கி கையெறி குண்டு வீசப்பட்டது. அதிபர் ஜார்ஜ் புஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1912: குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், தேர்தலில் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினார். மில்வாக்கி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.

அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்து வைத்த குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் மீதும், இரும்பிலான கண் கண்ணாடி மீதும் குண்டு பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.

1968 ஜூன் 6: முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் சகோதரரான ராபர்ட் கென்னடி, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில், மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1972: ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் தேர்தலில் ஜார்ஜ் சி.வாலஸ் போட்டியிட்டார். மேரிலாந்தில் நடந்த பிரசாரத்தில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தில், ஆர்தர் பிரேமர் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர், 2007ல் விடுவிக்கப்பட்டார்.

2024 ஜூலை 13: அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us