ADDED : ஆக 06, 2024 02:44 AM
புதுடில்லி, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பயணியரின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் விமான சேவைகளை, 'ஏர் இந்தியா'வை தொடர்ந்து, பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் ரத்து செய்து உள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த ஆண்டு துவங்கிய போர், ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே சமீபத்தில் கொல்லப்பட்டார்.
'இதற்கு தகுந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி தரப்படும்' என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், மேற்கு ஆசிய பகுதியில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணியர், விமான பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் நாளை மறுதினம் வரை ரத்து செய்வதாக, ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இதேபோல் ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.
இவை தவிர, கிரீஸ், போலந்து, ஹங்கேரி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், குரோஷியா, இத்தாலி ஆகிய நாடுகளின் சர்வதேச விமான நிறுவனங்களும் தங்களின் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து உட்பட அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.
அங்குள்ள கள நிலவரங்களை பொறுத்து, தங்கள் விமானங்களை இயக்குவது குறித்து அறிவிக்கப்படும் என சர்வதேச விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.