இரு பெண்களை கொன்று புதைத்த அமெரிக்கருக்கு 226 ஆண்டு சிறை
இரு பெண்களை கொன்று புதைத்த அமெரிக்கருக்கு 226 ஆண்டு சிறை
இரு பெண்களை கொன்று புதைத்த அமெரிக்கருக்கு 226 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 14, 2024 12:21 AM

ஆங்கோரேஜ்: அமெரிக்காவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பிரையன் ஸ்டீவ் ஸ்மித், 53, என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அலாஸ்கா மாகாணத்தில் வசித்து வந்தார்.
இவரது காரில் இருந்த மொபைல் போனை பாலியல் தொழிலாளி ஒருவர் திருடி, அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை ஆராய்ந்ததில், இரண்டு பெண்களை ஸ்மித் கொடூரமாக கொன்றது அம்பலமானது.
இது குறித்து, அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, 2019ல் ஸ்மித் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கேத்லீன் ஹென்றி, 30, வெரோனிகா அபூச்சுக், 52, ஆகியோரை கொன்றதை ஸ்மித் ஒப்புக்கொண்டார். அலாஸ்காவின் ஆங்கோரேஜில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேத்லீன் ஹென்றியை கொடூரமாக கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், மனைவி வீட்டில் இல்லாத போது, வெரோனிகாவை அழைத்துச் சென்ற ஸ்மித், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அலாஸ்கா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஸ்மித் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரு பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தலா 99 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.