நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்
நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்
நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்
ADDED : ஜூன் 26, 2024 07:54 AM

பீஜிங்: இதுவரை ஆராயப்படாத நிலவின் தொலைதுார பகுதியில் இருந்து, பாறை துகள்கள் மற்றும் மணல் மாதிரிகளை சீன விண்கலம் முதல்முறையாக பூமிக்கு வெற்றிகரமாக சேகரித்து வந்தது.
நிலவில் இருந்து பாறை துகள்கள் மற்றும் மணல் மாதிரிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே சேகரித்து வந்துள்ளன. சீனாவும் பலமுறை நிலவுக்கு விண்கலம் அனுப்பி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும், பூமியில் இருந்து நாம் நிலவை பார்க்கும்போது, கண்களுக்கு தென்படும் பகுதியில் இருந்து தான் எடுத்து வரப்பட்டன.
நம் கண்களுக்கு புலப்படாத நிலவின் தொலைதுார பகுதியில் இருந்து மாதிரிகள் இதுவரை சேகரிக்கப்படவில்லை. அவற்றை முதல்முறையாக சீனா செய்து காட்டியுள்ளது. நிலவின் தொலைதுாரப் பகுதி, மலைகள் மற்றும் பள்ளங்கள் நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது. இது, நம் கண்களுக்கு தெரியும் தட்டையான பகுதியுடன் முற்றிலும் வேறுபட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக சீனாவின், 'சாங் - இ6' என்ற விண்கலம், மே 3ம் தேதி நிலவுக்கு ஏவப்பட்டது. 53 நாட்கள் பயணித்த இந்த விண்கலம், நிலவின் தொலைதுாரப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
அங்கிருந்து பாறை துகள்கள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரித்த விண்கலம் வெற்றிகரமாக நேற்று பூமிக்கு திரும்பியது. வடக்கு சீனாவின் மங்கோலிய பகுதியில் நேற்று மதியம் தரை இறங்கியது. சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளில், 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவில் ஏற்பட்ட எரிமலை பாறைகள் உள்ளிட்ட அரிய தடயங்கள் இருக்கும் என, ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிலவின் இருபுறங்களுக்கு இடையே உள்ள புவியியல் வேறுபாடுகளுக்கு, இந்த மாதிரிகள் பதில் அளிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.