இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்
இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்
இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்

மேலூர்: '' மக்கள் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசிச் சென்றுள்ளனர். இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? மக்கள் பிரச்னையை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு பிரச்னை உருவாக்காமல் இருந்தால் போதும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'சுற்று பயணத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் இபிஎஸ் பேசியதாவது: திமுக அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் தொடங்கப்படுவதாக செய்தி வந்தது, சியா கமிட்டி அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், எங்களுக்கு இது தெரியாது, திட்டம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்தார். இன்னமும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை, ராமநாதபுரத்தில் ராட்சத பைப்புகள் போடப்படுகிறது, விவசாயிகள் எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் ஒப்பந்தம் இந்த மேலூர் தொகுதியில் 2023ல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. டங்ஸ்டன் வருவது தெரியாது என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள், ஆனால் அத்தனையும் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு இடையூறு செய்கிறது. இண்டி கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கிறது. கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி இணக்கமான முடிவெடுத்து 152 அடியாக உயர்த்தும் நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.ஆனால், திமுகவினர் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்,
அரசு என்றால் ஏழை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். ஆனால் அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்வதுதான் திமுக அரசின் சாதனை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் என்று . வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். ஏன் நான்காண்டுகளாக பிரச்னையை தீர்க்கவில்லை என்று மாவட்ட அமைச்சர் மூர்த்தியிடம் கேளுங்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்புவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் ஆற்றில் வீசிச் சென்றுள்ளனர் என்பதை ஊடகத்தில் பார்த்தோம், இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? மக்கள் பிரச்னையை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு பிரச்னை உருவாக்காமல் இருந்தால் போதும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.