நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை விழிக்குமா வேளாண் பொறியியல் துறை
நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை விழிக்குமா வேளாண் பொறியியல் துறை
நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை விழிக்குமா வேளாண் பொறியியல் துறை
ADDED : செப் 11, 2025 02:10 AM

சென்னை:அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால், வேளாண் பொறியியல் துறையினர், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.09 லட்சம் ஏக்கரில், குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. அடுத்த 10 நாட்களில் அறுவடை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவடை நேரத்தில் இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அத்தகைய நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு 3,500 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில், காலநிலை மாற்றம் காரணமாக, திடீர் மழை பெய்து வருகிறது.
இதனால், அறுவடைக்கு தயாராகிவரும் பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, அறுவடை பணிகளை விரைந்து முடிக்க, தேவையான அறுவடை இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறையினர் ஏற்பாடு செய்து உதவ வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
வேளாண் பொறியியல் துறையினர், அறுவடை இயந்திரங்களை வைத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இயந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு, அதிக வாடகை செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.