வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வருமா? காத்திருப்பதாக கனிமொழி அறிவிப்பு
வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வருமா? காத்திருப்பதாக கனிமொழி அறிவிப்பு
வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வருமா? காத்திருப்பதாக கனிமொழி அறிவிப்பு
ADDED : பிப் 23, 2024 11:30 PM
வேலுார்:தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை குழு நேற்று வேலுாரில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு மனுக்களை பெற்றது.
குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
தி.மு.க., ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை உருவாக்கி வருகிறது.
உங்களுடைய கோரிக்கை, கருத்துக்களை, அறிவுரைகளை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, பரிசீலித்து முதல்வரிடம் கலந்துரையாடி, பின் முழுமையான தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:
ஊழலுக்கு முதல் காரணம், தேர்தலில் அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதும், மக்கள் பணம் வாங்குவதும் தான். கேரளாவில் எந்த கட்சியும் மக்களுக்கு பணம் கொடுப்பது கிடையாது. அது போல இங்கும் பணம் கொடுக்கக்கூடாது. அந்த நிலை ஏற்பட்டால் தான் நாடு முன்னேறும்.
பல ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள், பயிற்சியே முடிக்காதவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, பயிற்சி முடித்ததாக சான்று அளிக்கின்றன. இதை தடுக்க தமிழ்நாடு அரசும், தி.மு.க., கருத்துக்கேட்பு குழுவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஸ்வநாதன் பேசினார். பின், நிருபர்களிடம் கனிமொழி கூறியதாவது:
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி அனைவருடைய வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய் இருக்கும் என்றார்; அதற்காக காத்திருக்கிறோம்.
தி.மு.க., பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அவர் ஆட்சிக் காலத்தில், தமிழகம் எல்லா துறைகளிலும் பின்நோக்கி தான் சென்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் வேண்டாம் என, சில விவசாயிகள் போராடுகின்றனர்; வேண்டும் என சிலர் போராடுகின்றனர். போராடும் விவசாயிகளை அமைச்சர்கள் சந்தித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.