அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்

விழுப்புரம்: ''ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நீண்ட நாள் நட்பு உள்ளது. அதனால் அவர் என்னை சந்தித்து பேசினார்'' என நிருபர்கள் கேள்விக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை போகிறேன். சின்ன மகள், கொள்ளு பேரன் எல்லாம் சென்னையில் தான் இருக்கிறார்கள். 2 நாட்கள் சென்னை செல்கிறேன். மருத்துவ சோதனைக்காக சென்னைக்கு செல்லவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
குருமூர்த்தி சந்திப்பு ஏன்?
ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நீண்ட நாள் நட்பு உள்ளது. அதனை மதிக்கிறேன். அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். அதேபோல் சைதை துரைசாமி. அவரும் ரொம்ப வருடமாய் எனக்கு பழக்கம். அதனால் இரண்டு பேரும் அன்றைக்கு வந்தார்கள்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.
அன்புமணி உடன் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''பார்த்தாங்க, பேசுனாங்க, அப்புறம் வந்து சொல்கிறேன். இப்பொழுது நேரம் ஆகிவிட்டது '' என ராமதாஸ் பதில் அளித்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
வாய்ப்பில்லை
சென்னையில் நிருபர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி: அன்புமணியை சந்திக்க வாய்ப்பில்லை. அரசியல் சந்திப்பிற்கு வாய்ப்பில்லை. அன்புமணியுடன் எந்த முரண்பாடு இல்லை.
பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை; நீங்கள் நினைக்கும் அணியில் பா.ம.க., இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷா வருகையின் போது பா.ஜ.,- பா.ம.க., கூட்டணி உறுதி செய்யப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''அது பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்பொழுது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.