எந்த செடியை எங்கே வைப்பது? ஆலோசனை சொல்ல ரூ.1 கோடி!
எந்த செடியை எங்கே வைப்பது? ஆலோசனை சொல்ல ரூ.1 கோடி!
எந்த செடியை எங்கே வைப்பது? ஆலோசனை சொல்ல ரூ.1 கோடி!
ADDED : செப் 19, 2025 07:09 AM

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலத் தில் தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, நான்கு நிறுவனங் கள் தகுதி பெற்றுள்ளன. எந்த இடத்தில் எந்த செடியை நடலாம் என, ஆலோசனை பெற, ஒரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள 160 ஏக்கர் நிலம், ரேஸ் கோர்ஸ் கிளப்பிடம், 99 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்பட்டு இருந்தது. ஒப்பந்த விதிகளை மீறிய தாக கூறி, குத்தகையை தமிழக அரசு ரத்து செய்து, நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 4,832 கோடி ரூபாய். இங்குள்ள 118 ஏக்கர் நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக, வருவாய்த்துறையிடம் இருந்த நிலம், தோட்டக்கலைத்துறைக்கு வகை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மீதமுள்ள நிலம் சென்னை மாநகராட்சி யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அங்கு, நீரை தேக்கும் வகையில், குளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளை, ஜூன் மாதம் தோட்டக்கலைத்துறை துவங்கியது. தற்போது, நான்கு நிறுவனங்கள், இதற்கான தகுதியை பெற்றுள்ளன. நிலம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.
வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப் பெற்றதும், அதில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து, தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, ஆலோசனை நிறுவனத்திற்கு கட்டணமாக, ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. பூங்கா அமைப்பதற்கு எங்கு செடிகளை நடலாம், மரக்கன்றுகள் நடலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேனாம்பேட்டையில் தோட்டக்கலைத்துறை வாயிலாக, சர்வதேச தரத்தில் நுாற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதைவிட பிரமாண்டமான பூங்காவை அமைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேஜிக் கிங்டம், ஜப்பானின் டோக்கியோ டிஸ்னி லேண்ட், டென்மார்க்கின் டிவோலிகார்டன்ஸ், ஆஸ்திரியாவின் வுர்ஸ்டெல்பிரேட்டர் ஆகியவற்றிற்கு இணையாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒண்டர்லா, லக்னோவில் உள்ள ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவை மிஞ்சும் அளவிற்கு நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவாக இது உருவாகும். நீதிமன்ற தீர்ப்புக்காக ஆயத்த நிலையில் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.