டில்லியில் நடந்தது என்ன? அ.தி.மு.க.,வினரிடம் வேலுமணி உற்சாகம்
டில்லியில் நடந்தது என்ன? அ.தி.மு.க.,வினரிடம் வேலுமணி உற்சாகம்
டில்லியில் நடந்தது என்ன? அ.தி.மு.க.,வினரிடம் வேலுமணி உற்சாகம்
ADDED : மார் 27, 2025 01:40 AM

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றிருந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நேற்று சட்டசபைக்கு உற்சாகமாக வந்தார்.
சட்டசபையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் காலை டில்லி சென்றார்.
அதேநேரத்தில், சபை நடவடிக்கைகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலுமணி, முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். சபை நடவடிக்கைகள் முடிந்ததும், அன்று மாலையில் டில்லிக்கு விமானத்தில் பறந்தனர். அமித்ஷாவை பழனிசாமியுடன் சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு முடிந்து, டில்லியில் இருந்து வேலுமணி, முனுசாமி நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக சட்டசபைக்கு வந்தனர். எதிர்க்கட்சி கொறடா என்ற அடிப்படையில், வேலுமணிக்கு, முன்வரிசையில் இருக்கை வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், சட்டசபைக்கு வந்ததும், பின்வரிசைக்கு சென்று, மூத்த எம்.எல்.ஏ.,க்களுடன் அமர்ந்து, டில்லியில் நடந்த விவரங்களை வேலுமணி விளக்கினார். அந்த தகவல்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஆர்வமாக கேட்டனர்.