புதுசா குற்றவாளிகள் உருவானா நாங்க என்ன பண்றது?: ரகுபதி நழுவல்
புதுசா குற்றவாளிகள் உருவானா நாங்க என்ன பண்றது?: ரகுபதி நழுவல்
புதுசா குற்றவாளிகள் உருவானா நாங்க என்ன பண்றது?: ரகுபதி நழுவல்
ADDED : ஜூலை 29, 2024 12:07 PM

சென்னை: ''முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். அதற்கு நாங்கள் என்ன பண்ணுவது?'' என சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் தோல்வி விரக்தியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக கூறுகிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல; சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். அண்மையில் நடந்த கொலைகள் முன்விரோதத்தால் நடைபெற்றவை. சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு தமிழகத்தில் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடக்கும் கொலைகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகுமா? ஆனால் இதனை தடுப்பதற்கு நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏ, பி பட்டியலில் உள்ள ரவுடிகள் விசாரிக்கப்படுகின்றனர். சிறார் குற்றவாளிகள் சீர்திருத்தப்பட்டு வெளியில் அனுப்பப்படுகின்றனர்.
முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். அதற்கு நாங்கள் என்ன பண்ணுவது? காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதால் குற்றங்கள் குறைகின்றன. அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் அரசியல் தலைவர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆணவ கொலை தொடர்பாக அரசு தைரியமான முடிவை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.