Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

ADDED : ஜூன் 07, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: திருவண்ணாமலை மலையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை பாதையில் உள்ள சட்ட விரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'எந்த அனுமதியும் பெறாமல், 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், 'திருவண்ணாமலை மலை பாதையில் 1,535 சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வரும் 20ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு?


இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கும் நேற்று, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'நில நிர்வாக ஆணையர் தரப்பு அளித்த அறிக்கையில், நீர் நிலைகள் என மனுதாரர் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில், 84 மட்டுமே நீர் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'வகைப்படுத்தப்பட்டு உள்ள 84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா; அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us