Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

UPDATED : ஜன 05, 2024 11:34 AMADDED : ஜன 05, 2024 10:38 AM


Google News
Latest Tamil News
சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (5.1.2024 முதல் 11.1.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்


கேது, சுக்கிரன், புதன், சனி நன்மையை வழங்குவர். குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

அசுவினி: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்ப்பு விலகும், உடல்நிலை சீராகும், இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். லாப சனியால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிறு திங்களில் செயல்களில் நிதானம் தேவை.

பரணி: லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும், ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். வியாபாரம் விருத்தியாகும். திங்கள் செவ்வாயில் நெருக்கடி உண்டாகும். அமைதி காப்பது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: புத பகவானால் எண்ணம் தெளிவாகும். செயல்களில் லாபம் தோன்றும். குரு பகவானின் பார்வையால் குடும்ப நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகவல் வரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய்க்கிழமை செயல்களில் பொறுமை அவசியம்.

சந்திராஷ்டமம்

7.1.2024. மதியம் 1:10 மணி - 9.1.2024 இரவு 7:41 மணி



ரிஷபம்


ராகு நன்மைகளை வழங்குவார். பிரத்தியங்கிராவை வழிபட வளம் உண்டாகும்.

கார்த்திகை 2,3,4: கடந்த வார சங்கடம் நீங்கும், செய்துவரும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அந்நியர்களால் ஆதாயம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செவ்வாய் அன்று செயல்களில் சில சங்கடம் தோன்றி மறையும்.

ரோகிணி: லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். செயல்களில் ஆதாயம் தோன்றும். குரு பகவான் பார்வையால் நன்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஏற்படும். புதன் அன்று புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

மிருகசீரிடம் 1,2: புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.தொழிலில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாழன் அன்று செயல்களில் நிதானம் தேவை.

சந்திராஷ்டமம்

9.1.2024 இரவு 7:42 மணி - 11.1.2024 இரவு 11:59 மணி



மிதுனம்


புதன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். உலகளந்த பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். ஆறாமிட புதனால் உத்தியோகத்தில் இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும்.

திருவாதிரை: நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். என்றாலும் பாக்கிய சனியால் வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரத் தடை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.

புனர்பூசம் 1,2,3: லாப குருவால் உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும், சுய தொழில் செய்துவரும் சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். ஆறாமிடத்திற்கு சனி பகவான் பார்வை கிடைக்கும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும். வருமானம் பல வழிகளிலும் வரும்.

கடகம்


கேது, சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வர வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புனர்பூசம் 4: அஷ்டம சனி, பத்தில் குரு என பயமுறுத்தினாலும் மூன்றாமிட கேதுவால் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். பொருளாதார நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் லாபம் தோன்றும். உங்கள் எண்ணம் பலிக்கும்.

பூசம்: ஆறாமிட சூரியனும் செவ்வாயும் அரணாக இருப்பர். பண வரவில் உண்டான சங்கடம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசு விவகாரங்களில் அனுகூலம் உண்டு.

ஆயில்யம்: மூன்றாமிட கேதுவும், ஐந்தாமிட சுக்கிரனும் வாரம் முழுவதும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். வரவு அதிகரிக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், குருவின் பார்வைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்


சுக்கிரன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். குலதெய்வ வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும் பாக்கிய குருவாலும் அவருடைய பார்வைகளாலும் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாபம் காண்பீர். நினைத்ததை சாதிப்பீர். அந்தஸ்து உயரும்.

பூரம்: உங்கள் நட்சத்திர நாதனும் தனாதிபதியும் நான்கில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல் படுவீர். வரவு அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். ஒன்பதாமிட குருவால் வருமானம், செல்வாக்கு உயரும். முயற்சி ஆதாயமாகும்.

உத்திரம் 1: குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கினாலும், குரு பகவானின் சஞ்சாரமும் பார்வையும் செயல்களை லாபமாக்கும். விருப்பம் நிறைவேற்றும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

கன்னி


சுக்கிரன், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவர். காளத்தீஸ்வரரை வழிபட்டு வர சங்கடம் குறையும்.

உத்திரம் 2,3,4: ராசிக்குள் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரித்து நெருக்கடிகளை அதிகரித்தாலும் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் செயல் வெற்றியாகும், வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

அஸ்தம்: ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், போட்டியாளர் விலகுவார். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். முயற்சி முன்னேற்றம் தரும். வரவு அதிகரிக்கும்.

சித்திரை 1,2: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவருடைய பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வருமானமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்


சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய், ராகு, குரு நன்மையை வழங்குவர். நவக்கிரக சுக்கிரனை வழிபட வளம் கூடும்.

சித்திரை 3,4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாயால் ஆற்றல் அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வரும்.

சுவாதி: ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். ஆறாமிட ராகுவால் உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்ப்பு விலகும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.

விசாகம் 1,2,3: உங்கள் லாப ஸ்தானாதிபதியும், குடும்பாதிபதியும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி செயல்களில் ஆதாயம் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் நிலை மாறும், குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆறாமிட ராகுவால் வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்


புதன், சுக்கிரன், கேது நன்மையை வழங்குவர். மீனாட்சி அம்மனை மனதில் நினைத்து வழிபட சங்கடம் தீரும்.

விசாகம் 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வருமானத்தை வழங்குவார். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும். ராசிக்குள் லாபாதிபதி, சப்தமாதிபதியும் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றியாகும்.

அனுஷம்: உங்கள் நட்சத்திரநாதன் நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும், ராசியாதிபதியும், ஜீவனாதிபதியும் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனமும் பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

கேட்டை: ராசிக்குள்ளே நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். குரு பார்வைகள் உங்களுக்கு சாதகம் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு


சனி, குரு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை அதிகரிக்கும்.

மூலம்: தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் தொழில்மீது அக்கறை உண்டாகும். கடந்த கால சங்கடம் விலகும். சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

பூராடம்: உங்கள் நட்சத்திர நாதனும் ராசிக்கு லாபாதிபதியுமான சுக்கிரன் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார், தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சங்கடம் விலக ஆரம்பிக்கும்.

உத்திராடம் 1: கடந்த காலத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி ஸ்தான சனியும், பஞ்சம ஸ்தான குருவும் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு நன்மைகளை வழங்குவர். செல்வாக்கு உயரும், எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்


ராகு, சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவர். நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.

உத்திராடம் 2,3,4: ஜென்ம சனி விலகி விட்டதால் இதுவரை இருந்த பாதிப்பு விலகும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

திருவோணம்: குரு பகவான் பார்வையால் திறமை, புகழ் வெளிப்படும், தொழிலில் இருந்த தடை விலகும். முயற்சி யாவும் வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் தோன்றும். இதுவரை தடைபட்டு வந்த காரியம் இனி நடைபெற ஆரம்பிக்கும். விரய ஸ்தானத்தில் இருக்கும் சூரியன், செவ்வாயை, குருபார்ப்பதால் பூமி, வாகனம் என சுப விரயங்கள் உண்டாகும்.

அவிட்டம் 1,2: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், புதனால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சி வெற்றியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் மூன்றாமதிபதி குரு பகவான் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் வீண் செலவு குறையும், சுபச்செலவு அதிகரிக்கும்.

கும்பம்


புதன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடங்களை நீக்கும்.

அவிட்டம் 3,4: உங்கள் ராசிநாதன் ராசிக்குள் சஞ்சரித்திருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். லாப ஸ்தானத்தில் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வழி முயற்சி அனுகூலமாகும்.

சதயம்: ராசிக்குள் சனி பகவான், இரண்டாமிடத்தில் ராகு, எட்டாமிடத்தில் கேது சஞ்சரித்தாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் செவ்வாயும் உங்கள் முயற்சிகளை லாபமாக்குவர், வழக்குகளில் சாதகம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

பூரட்டாதி 1,2,3: கடந்த வாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில் ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர், காரியங்களில் நன்மை உண்டாகும். சந்திர பகவானின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் விருப்பம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்

2.1.2024 மாலை 5:17 மணி - 5.1.2024 அதிகாலை 4:13 மணி



மீனம்


குரு, சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

பூரட்டாதி 4: உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் இருக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும், வருமானம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை செயல்களில் தடை உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.

உத்திரட்டாதி: ஜென்மத்தில் ராகு, ஏழில் கேது சஞ்சரித்தாலும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், பாக்கியஸ்தான சுக்கிரன், தனஸ்தான குருவால் நெருக்கடி விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை நீங்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வெள்ளி சனியில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.

ரேவதி: விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்தாலும் குருவின் சஞ்சாரம் பார்வையும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். குடும்பம், தொழில், உடலில் இருந்த பாதிப்பு நீங்கும். பத்தாமிட சூரியனால் அரசு வழி செயல்களில் ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். சனி ஞாயிறில் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம்

5.1.2024 அதிகாலை 4:14 மணி - 7.1.2024 மதியம் 1:09 மணி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us