டிசம்பரில் இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்புவோம் கோவையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
டிசம்பரில் இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்புவோம் கோவையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
டிசம்பரில் இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்புவோம் கோவையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
ADDED : செப் 19, 2025 03:36 AM

கோவை:''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டுடன், விண்வெளிக்கு இயந்திர மனிதனை டிசம்பரில் அனுப்பி சோதனைகள் மேற்கொள்ளப்படும்,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக திரும்பும் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தாண்டு டிசம்பரில் ஆளில்லா விண் ஊர்தியை அனுப்ப உள்ளோம்.
80 சதவீத பணி அதில், 'வயோமித்ராய்' என்ற ஒரு இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறோம். இது, வெற்றி பெற்ற பின், இரண்டு ஆளில்லா விண்கலன்களை அனுப்புவோம்.
வரும், 2027 மார்ச் காலகட்டத்தில், மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வருவர். ஓராண்டுக்கும் மேலாக இதற்கான வாகனத்தை தயார் செய்து வருகிறோம். ககன்யான் திட்டத்தில் நிறைய பணிகள் உள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்ய வேண்டும். 80 சதவீத பணிகள் முடிந்தாலும், இனி வரும் பணிகள் கடினமானவை. ஆள் பயணிக்கும் அறை, அதன் வெப்ப கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும்.
விண்கலத்தில் பிரச்னை வந்தால், பயணிப்போரை பாதுகாக்கும் அமைப்பு உருவாக்க வேண்டும். விண்வெளி வீரர்கள் முதல்கட்டமாக, 170 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்வர்.
அங்கிருந்து, 400 கி.மீ., செல்ல வேண்டும் . அந்த பயணத்துக்கு தேவையான கருவிகளை உருவாக்க வேண்டும்.
திரும்பி வரும் போது, ஒன்பது பாராசூட்கள் தேவை. கடலில் குதிக்க வேண்டிய நிலை இருக்கும். அதற்கான பயிற்சிகள் நடக்கின்றன.
செயற்கைக்கோள் தேசிய அளவிலான இத்திட்டத்தில் முப் படைகளின் பங்களிப்பும் உண்டு. 2027 தொடக்கத்தில், விண்வெளிக்கு ஆள் அனுப்ப திட்ட மிட்டுள்ளோம். இந்தியாவின் விண்வெளி திட்டத்தை, 1962ல் துவக்கினோம். தற்போது உலகில் ஒன்பது துறைகளில் முதலிடத்தில் உள்ளோம். சந்திரயான் நிலவில் தரையிறங்கிய முதல் நாடு.
தண்ணீரை கண்டுபிடித்ததிலும் முதல் நாடு. நம் நாட்டின் கேமரா தான் மிகவும் துல்லியமானது.
செவ்வாய்க்கு செல்வதில் வெற்றி பெற்ற முதல் நாடும் நம் நாடு. ஒரே ராக்கெட்டில், 104 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளோம். சூரியனை படம் பிடிக்கும் செயற்கைக்கோள் ஆதித்யாவை செலுத்தினோம்.
செயற்கை நுண்ணறிவு திட்டம் அனைத்திலும் பயன்படுத்தப்படுவதை போல, தற்போது இயந்திர மனிதனை அனுப்பும் திட்டம், ஆளில்லா செயற்கைக்கோள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. நிலாவை ஆராயவும் இத்தொழில்நுட்பம் உதவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.