Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

Latest Tamil News
மதுரை: 'ஹிந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்கின்றனர்,' என்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது; இது ஒரு சாதாரணமான கூட்டம் இல்லை. ஒரு இனம் தனது குரலை உரக்க சொல்லிக் கொண்டே இருக்கிறது. தனது உரிமையை நிலைநாட்ட விரும்புகிறது. தனது வாழ்வியல் முறையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஏங்குகிறது.

சனாதன தர்மம் பிரச்னைக்குள்ளாக்கப்படுகிறதோ, அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கே வந்துள்ளார். உலகம் முழுதும் யூதர்கள் 0.2 சதவீதம் உள்ளனர். அவர்கள் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததற்காக 4 நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். எங்களின் வாழ்வியல் முறைக்கு தொந்தரவு செய்தால் எழுந்து நிற்போம் என்று இஸ்ரேல் நாடு நிற்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, 37 மணிநேரம் பறந்து வந்து இன்னொரு நாட்டின் மீது குண்டை வீசி விட்டு திரும்பிச் சென்றுள்ளது.

ஆனால், இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால் சில மனிதர்களுக்கு பிரச்னை. நம்ம ஊரில் மட்டும் தான் நம்முடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்துள்ளனர். பஹல்காமில் நீ ஹிந்து மதமா? என்று கேட்டு 26 உயிர்களை சுட்டுக் கொன்றனர். என்னுடைய வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால், எழுந்து நிற்பேன் என்று நாமும் எழுந்து நிற்கிறோம்.

ஹிந்து என்பதற்காக நம் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த மதத்தை பின்பற்றினால் மட்டும் நம்முடைய ஓட்டுக்களை பெற்று அதிகாரத்தில் இருந்தவர்கள் கோவில்களை கிண்டல் செய்கிறார்கள். ஹிந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்கின்றனர். கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்னை வரக் கூடாது. எங்களின் குழந்தைகள் பள்ளிக்கு தைரியமாக திருநீறு வைத்துக் கொண்டு போக வேண்டும். வட தமிழகத்தில் பள்ளிக்கு ருத்ராட்சை கொட்டை வெளியே அணிந்து செல்ல வேண்டும்.

இந்த மாநாட்டில் திரண்டு உள்ள கூட்டம், எழுச்சியை காட்டுகிறது. இது, ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி. காசு கொடுக்காமல், கொள்கைக்காக 5 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவ மதம் 230 கோடி பேர். முஸ்லிம்கள் 200 கோடி பேர். ஹிந்துக்கள் 120 கோடி பேர். எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் 190 கோடி பேர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் பல நாடுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள நாடுகள் 2 மட்டுமே.

முருகனின் அறுபடை வீடுகளில் ரூ.50, ரூ.100 என கட்டணம் இல்லாமல் தரிசிக்க முடியுமா? 2026ம் ஆண்டு தேர்தலுக்கும், இந்த மாநாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நம்முடைய வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக நாம் இங்கு திரண்டுள்ளோம். 44,000 கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான 344 கோவில்களும் அதில் அடங்கும். எங்கியாவது ஒழுக்கமாக அறநிலையத்துறையின் செயல்பாடுகள் உள்ளதா? பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும், பணமில்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் நடத்தப்படுகிறது. இதை மாற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us