Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

ADDED : ஜூன் 19, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
சென்னை: சொத்து விற்பனையில் கிரையப்பத்திரம் பதிவான சில மணி நேரத்தில், வில்லங்க சான்றிதழ் மொபைல் போனுக்கு அனுப்பும் வகையில் பணிகளை, பதிவுத் துறை முடுக்கி விட்டுள்ளது.

தமிழக சார்-பதிவாளர் அலுவலகங்களில், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பதிவு நாளிலேயே பத்திரத்தை பொதுமக்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து குறித்து, கள ஆய்வு தேவைப்படும் நிகழ்வுகள் தவிர்த்து மற்ற அனைத்து பத்திரங்களையும் அதே நாளில் திருப்பித்தர வேண்டும் என, சார்-பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதிவு பணிகளை விரைவாக முடித்தாலும், சொத்து பரிமாற்றம் குறித்த விபரங்களை பதிவுத் துறையின் தகவல் தொகுப்பில் சேர்க்க ஓரிரு நாட்கள் ஆகும். இதன்பின் தான் பொது மக்கள், அந்த குறிப்பிட்ட சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை பெற முடியும்.

இந்நிலையில், பதிவு முடிந்த நாளிலேயே பத்திரம் கிடைக்கும் முன், வில்லங்க சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு மொபைல் போன் வாயிலாக அனுப்பும் புதிய நடைமுறையை, பதிவுத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவாகும்போது, அது குறித்த விபரங்கள், தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், பத்திரம் பதிவு செய்தவரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., தகவல் வரும்.

அதில் உள்ள இணைப்பை, 'கிளிக்' செய்தால், கடைசியாக நடந்த பத்திரப்பதிவு விபரம் அடங்கிய வில்லங்க சான்றிதழ் பிரதி கிடைக்கும். பொதுமக்கள், இதை எவ்வித கட்டணமும் இன்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்த இணைப்பில், 30 நாட்களுக்கு வில்லங்க சான்றிதழ் அப்படியே இருக்கும். சொத்து வாங்கியவர்கள், அதன் அடிப்படையில் சொத்து வரி, மின்சார இணைப்பு உள்ளிட்ட பெயர் மாற்றம் செய்ய, இது உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us