Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

ADDED : செப் 13, 2025 06:40 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'விஜயின் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்' என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தை கட்சிக்கும் லட்சக்கணக்கானோர் திரள்கிறார்கள். அண்மையில் நாங்கள் நடத்திய மாநாட்டில் பல லட்சம் பேர் திரண்டார்கள். அதனை வைத்து விசிக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்று எந்த ஊடகமும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா, மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று யாரும் விவாதிக்கவில்லை.

மாயத் தோற்றம்

விஜய் ஒரு பிரபலமான சினிமா நடிகர், கதாநாயகர் என்பதை வைத்துக் கொண்டு, பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்பதைப் போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். திமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் லட்சக்கணக்கான பேரும், அரசியல் சக்திகளாக வருகிறார்கள்.

கொள்கை, கோட்பாட்டு புரிதலோடு களத்தில் நிற்கிறவர்கள், நீண்டகாலமாக அரசியல் களத்தில் மக்களோடு நிற்பவர்கள். அந்தப் பெரும் திறனுக்கும், நண்பர் விஜய்க்கு திரண்டவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆகவே இந்த மக்கள் கூட்டத்தை மட்டுமே பொருட்டாக எடுத்துக் கொண்டு ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்தப் போகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

விஜய் தொடர்ந்து திமுகவை பற்றி மட்டுமே பேசி வருவதால், அவர் ஏதோ திட்டமிடப்பட்ட அஜெண்டாவிற்காக வந்திருக்கிறார் என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது. அவர் பொதுவாக பரவலாக தமிழக அரசியலை பற்றி பேசியிருந்தால், அவர் எதிர்காலத்தில் என்ன செய்கிறோம் என்பது பற்றி பேசியிருந்தால் இந்த தோற்றம் உருவாகாது. எனவே அவர் திட்டமிடப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவரா என்ற கேள்வியும் எழுகிறது.

மாற்றம் வருமா?


கமலஹாசன் இன்று திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறார். அவர் அரசியலில் அடி எடுத்து வைத்த போது அரசியலை பார்த்த முறை வேறு. அரசியலுக்குள் ஒரு தலைவராக களத்தில் இறங்கிய பிறகு அவர் அரசியலை அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கொள்கை சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாக நான் நம்புகிறேன். விஜயை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவருடைய அணுகு முறையிலும் நிலைப்பாட்டிலும், எதிர்காலத்தில் மாற்றம் நிகழ்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

விஜய்க்கு வாழ்த்துக்கள்

முன்னதாக, கோவையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: இன்று பிரசாரத்தை துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது அவருடைய களப்பணியை தீவரப்படுத்தி இருக்கிறார். மகிழ்ச்சி. அவர் அரசியலில் அடி எடுத்து வைத்திருப்பதன் மூலம், தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப்போகிறது என்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுத்தேர்தல்

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்த ஒரு அணி மட்டும்தான் தமிழகத்தில் இப்போது ஒரு உருவத்தை, வடிவத்தை பெற்று இருக்கிறது. வலுவாகவும் இருக்கிறது. தொடர்ந்தும், இயங்குகிறது. 2016, 17ல் உருவான இந்த அணி, கட்டுக்கோப்பாக பல தேர்தல்களை சந்தித்து, வெற்றி வாகை சூடிய நிலையில் இப்போது 2026ம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டசபை பொதுத் தேர்தலையும் சந்திக்க உள்ளது. இந்த அணியை வீழ்த்துவோம் என்று பல முனைகளில் இருந்து குரல்கள் வருகின்றன. அதில் ஒரு குரல் விஜய்யின் குரல்.

எந்த பாதிப்பையும்...!

இன்னொருபுறம் அதிமுக. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்.

பலமில்லை

அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை. திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவிற்கு விஜய் பலம் பெறவில்லை இவ்வாறு திருமாவளவன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us