சூழ்ச்சியால் விஜயபிரபாகர் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா புகார்
சூழ்ச்சியால் விஜயபிரபாகர் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா புகார்
சூழ்ச்சியால் விஜயபிரபாகர் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா புகார்
UPDATED : ஜூன் 06, 2024 04:05 PM
ADDED : ஜூன் 06, 2024 11:58 AM

சென்னை: ‛‛ விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க.,வின் விஜயபிரபாகர் தோற்கடிக்கப்படவில்லை. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு உள்ளார். அங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் மிக மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். அங்கு அவர், தோல்வியடையவில்லை. தோற்கடிக்கப்பட்டு உள்ளார். வீழ்ச்சி அடையவில்லை. வீழ்த்தப்பட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல வேட்பாளர்கள் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். விஜயபிரபாகர் அப்படி தோற்று இருந்தால் நாங்களும் ஏற்று இருப்போம். ஆனால், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்.
முதலில் சொல்லப்பட்ட ஓட்டு எண்ணிக்கைக்கும், பிறகு வெளியிடப்பட்ட ஓட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. மதியம் 3 முதல் 5 மணி வரை ஓட்டு எண்ணிக்கையை கலெக்டர் நிறுத்தினார். இதற்கு காரணம் என்ன? தனக்கு நெருக்கடி உள்ளது. பலர் நிர்பந்தம் செய்கின்றனர். சமாளிக்க முடியவில்லை என கலெக்டர் , ஓட்டு எண்ணும் மையத்தில் கூறுகிறார். அப்படி செய்தது யார்? மதுரையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் விருதுநகர் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
13வது சுற்றுக்கு பிறகு குளறுபடி நடந்துள்ளது. 13வது சுற்றுக்கு பிறகு 18 வது சுற்றுக்கு சென்றனர். விருதுநகரில் மட்டும் தான் நள்ளிரவு வரை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்தது. அங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் நியாயமான மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். அப்போது என்ன முடிவு வந்தாலும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.