பிறந்த நாளில் கட்சியினரை தவிர்த்த விஜய் வாழ்த்தியவர்களுக்கு வலைதளத்தில் நன்றி
பிறந்த நாளில் கட்சியினரை தவிர்த்த விஜய் வாழ்த்தியவர்களுக்கு வலைதளத்தில் நன்றி
பிறந்த நாளில் கட்சியினரை தவிர்த்த விஜய் வாழ்த்தியவர்களுக்கு வலைதளத்தில் நன்றி
ADDED : ஜூன் 24, 2025 05:40 AM

சென்னை : பிறந்த நாள் கொண்டாட்டத்தையும், பிறந்த நாளில் கட்சியினரை சந்திப்பதையும் தவிர்த்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன்னை வாழ்த்தியவர்களுக்கு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு நேற்று முன்தினம் 51வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது பிறந்த நாளை த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாநிலம் முழுதும் கொண்டாடினர். அவரை சந்திக்க கட்சி தொண்டர்கள், பனையூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அதிகாலை முதல் மாலை வரை தவம் கிடந்தனர்.
ஆனால், அவர் வெளியே வரவே இல்லை. ஜெயலலிதா பாணியில், பால்கனியில் நின்றாவது கையசைப்பார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அடையாறில் உள்ள தன் மற்றொரு வீட்டிற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிறந்த நாள் கொண்டாடிய கட்சியினருக்கு, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். உளுந்துார்பேட்டையில், விஜய் பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு விஜய் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு, சமூக வலைதள பக்கத்தில் விஜய் நேற்று நன்றி தெரிவித்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்பான தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள், உலகம் முழுதும் இருந்துவரும், உங்களின் அன்பு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு, மக்களுக்கு சேவை செய்வதற்கான, என் பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுத்து செல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.