Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ போலீசாக நடிப்பதால் விமர்சனம் தவிர்த்த விஜய்? ஆனந்த் அறிக்கையால் கட்சியினர் அதிர்ச்சி

போலீசாக நடிப்பதால் விமர்சனம் தவிர்த்த விஜய்? ஆனந்த் அறிக்கையால் கட்சியினர் அதிர்ச்சி

போலீசாக நடிப்பதால் விமர்சனம் தவிர்த்த விஜய்? ஆனந்த் அறிக்கையால் கட்சியினர் அதிர்ச்சி

போலீசாக நடிப்பதால் விமர்சனம் தவிர்த்த விஜய்? ஆனந்த் அறிக்கையால் கட்சியினர் அதிர்ச்சி

ADDED : ஜூலை 01, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
சென்னை: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக விஜய் கருத்து தெரிவிக்காமல், பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறார்; ஜனநாயகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அடித்து கொலை


ஆக., மாதம் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் என பணிகள் நடந்து வருகின்றன.

மக்களை கவரும் நடவடிக்கைகளில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது, மாநிலம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடவடிக்கைக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஏமாற்றம்


இது, அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த சம்பவம் குறித்த தன் கருத்தை எந்த ரூபத்திலும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு பதிலாக, கட்சி பொதுச்செயலர் ஆனந்த் பெயரில் அறிக்கை வெளியானது. விஜய் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகும்; அதை வைத்து பொதுமக்களுடன் இணைந்து, போராட்டம் நடத்தலாம் என காத்திருந்த சிவகங்கை மாவட்ட த.வெ.க.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

போன் 'ஸ்விட்ச் ஆப்'


திருப்புவனம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் தரப்பில், ஆனந்த் வாயிலாக விஜய்க்கு தகவல் அனுப்பப்பட்டது. ஜனநாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிக்கிறார்.

இந்த நேரத்தில் போலீசாரை விமர்சித்தால், அது சரியாக இருக்காது என்பதால், ஆனந்தை வைத்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற த.வெ.க.,வினரிடம் விஜய் அறிக்கை வெளியிடாதது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால், போராட்டக் களத்திற்கு செல்லாமல், மாவட்ட நிர்வாகிகள் ஒதுங்கி உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு குறைந்த காலம் தான் உள்ளது.

தனக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே அறிக்கை வெளியிட்டால், எப்படி கட்சியை வளர்ப்பது என ஆனந்திற்கு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்க முடியாமல் அவர் தன் மொபைல் போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us