Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காலபைரவர் ஆட்சி செய்யும் வாரணாசி காவல் நிலையம்!

காலபைரவர் ஆட்சி செய்யும் வாரணாசி காவல் நிலையம்!

காலபைரவர் ஆட்சி செய்யும் வாரணாசி காவல் நிலையம்!

காலபைரவர் ஆட்சி செய்யும் வாரணாசி காவல் நிலையம்!

ADDED : ஜன 06, 2024 08:03 PM


Google News
Latest Tamil News
வாரணாசியில் உள்ள கோட்வாலே என்ற காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டருக்கான இருக்கையில், உள்ளூர் காவல் தெய்வமான காலபைரவர் அமர்ந்து ஆட்சி புரிகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், விஷேஷ்வர்கன்ச் பகுதியில், பாபா காலபைரவர் கோவில் அமைந்துள்ளது.

திருஷ்டி, துர்சக்திகளால் ஏற்படும் பாதிப்பு, நோய் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து தீர்வு பெற, இங்கு வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு சிறப்பு பூஜை செய்து, கயிறு கட்டி விடுவதும் வழக்கமாக உள்ளது.

இப்பகுதியில் கோட வாலே காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதி மொத்தமும், பாபா காலபைரவர் பாதுகாப்பில் இருப்பதாக, இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

அதன் எதிரொலியாக, இங்குள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கான இருக்கையில், பாபா காலபைரவர் படம் வைத்து, பூஜை செய்யப்படுகிறது. காவல் நிலையத்தின் தலைமை பொறுப்பில் காலபைரவர் இருப்பதாகவும், போலீசாரும் நம்புகின்றனர்.

இங்கு யார் இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வந்தாலும், அவர்கள் காலபைரவர் கடவுளுக்கு அடுத்த நிலையில், தனியாக நாற்காலி போட்டு அமர்ந்து தான் பணிகளை கவனிக்கின்றனர். காலபைரவர் ஆட்சி புரிவதாக நம்புவதால், மேலதிகாரிகளும் இந்த காவல் நிலையத்தை ஆய்வு செய்ய வருவதில்லை என்றும், இங்கு பணிபுரியும் காவலர்கள் கூறுகின்றனர்.

இந்த காவல் நிலையம் மட்டுமல்லாது, இந்த மாவட்டத்துக்கு காவல் மற்றும் வருவாய் நிர்வாக பணிகளுக்கு, எந்த உயரதிகாரி வந்தாலும், அவர்கள் காலபைரவரை வழிபட்டு, அவரது உத்தரவுப்படி செயல்படுவதாக மக்கள் சொல்கின்றனர். இந்த வழக்கம், பல ஆண்டுகளாக தொடர்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, இப்பகுதிக்கான காவல் துறையின் கூடுதல் துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது:

உள்ளூர் மக்கள் காவல் தெய்வமாக வழிபடும் கடவுள் என்பதால், அதை ஏற்கிறோம். இப்பகுதி மக்களின் இறை நம்பிக்கை என்ற அடிப்படையில், இது தொடர்கிறது.

இதனால், எந்த சர்ச்சையும் ஏற்பட்டதில்லை. காவல்துறை உள்ளூர் மக்களுடன் நெருங்கி இருப்பதற்கு, இது ஆதாரமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us