ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
ADDED : ஜன 02, 2024 11:26 PM
திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் 10ம் திருநாளான நேற்று முன் தினம், நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். நேற்று, நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த மாதம் 12ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. தொடர்ந்து, பகல் பத்து உற்சவம், ராப்பத்து உற்சவம் நடந்தன. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான டிச., 23ம் தேதி, சொர்க்கவாசல் திறப்பும் நடைபெற்றது.
ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளான நேற்று முன் தினம் தீர்த்தவாரி நடைபெற்றது.
முத்துப் பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர அபயஹஸ்தம், தங்க பூணுால் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்து சந்திர புஷ்கரணி வந்தடைந்தார்.
பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
தீர்த்தவாரிக்கு பின், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இரவு முழுதும் திருமாமணி மண்டபம் என்ற ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்த நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அத்துடன், ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது.