திருச்சி புது மாப்பிள்ளை சேலத்தில் கொடூர கொலை
திருச்சி புது மாப்பிள்ளை சேலத்தில் கொடூர கொலை
திருச்சி புது மாப்பிள்ளை சேலத்தில் கொடூர கொலை
ADDED : ஜன 05, 2024 03:51 AM

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் தியாகு, 26; கட்டட தொழிலாளியான இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன் திருமணமானது.
இவர், ஐந்து நாட்களுக்கு முன், சேலம், ஜாகீர்காமிநாயக்கன்பட்டி, பூனைக்கரட்டில் உள்ள அய்யம்பெருமாள், 51, வீட்டுக்கு வாடகைக்கு வந்தார். இவரை, திருச்சி, துறையூரை சேர்ந்த பாலன், 30, அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் வேலைக்கு சேலம் அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர், நேற்று காலை பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு, அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். பாலன், வரலட்சுமி தலைமறைவானதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மனைவி கொலை: கணவர் கைது
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து 56. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி மருதம்மாள் 54. இவர்களது மகள் விமலாதேவி. சென்னையில் அரசு டாக்டராக பணிபுரிகிறார். இங்குள்ள வீட்டில் இன்னாசிமுத்து, மனைவி மட்டும் வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவில் கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டது. மருதம்மாள் தம்பி சின்னமருதுவிடம் அலைபேசியில் இதுகுறித்து தெரிவித்தார். 'இருவரும் தூங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் ' என மருது கூறியுள்ளார்.
நேற்று காலையில் சின்ன மருது அக்கா வீட்டுக்கு சென்றார். கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மருதம்மாள் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இன்னாசிமுத்து அங்கு இருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர், சின்ன மருதுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். காயமுற்ற சின்ன மருது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் இன்னாசிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
7.7 கிலோ தங்கம் பறிமுதல்
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தர்கா பஸ் ஸ்டாப்பில் டூவீலரில் சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் மடக்கி பிடித்த போது, தப்பி ஓடிவிட்டார். பின் டூவீலரில் பதுக்கி வைத்திருந்த 7.700 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4.80 கோடி.
இந்த தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்ததாகவும், மேலும் தங்க கட்டிகளை தங்கச்சிமடத்தில் பதுக்கி வைத்து உள்ளாரா எனவும் சுங்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். தப்பி ஓடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.
மாணவிக்கு தொல்லை; ஆசிரியருக்கு 'போக்சோ'
புதுக்கோட்டையில், அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோகர், 36. இவர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியின் தாய் புகார்படி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மனோகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தொப்புள் கொடியுடன் பெண் சிசு உடல் மீட்பு
பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில், துறையூர் - பெரம்பலுார் நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை பாலம் அருகே, தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், பெண் சிசு இறந்து கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து பெரம்பலுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிசுவின் உடலை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரிக்கின்றனர்.
நாய் கடித்து 10 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனைக்குட்டத்தில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
அலைபேசி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் மருது கணேஷ் 14, அதிக நேரம் அலைபேசி பார்ப்பதை தாயார் கலையரசி 39, கண்டித்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த மதுரை வீரன் மனைவி கலையரசி. தனியார் பள்ளி ஆசிரியை. இத்தம்பதியின் மகன் மருதுகணேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் அதிக நேரம் மருது கணேஷ் அலைபேசியை பார்த்து வந்ததை தாயார் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை மாணவர் மருது கணேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னாள் மாடல் அழகி சுட்டுக்கொலை
ஹரியானாவின் குருகிராமில் வசித்து வந்த பிரபல தாதா சந்தீப் கடோலி, கடந்த 2016ல் மஹாராஷ்டிராவின் மும்பையில் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்டர் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டனர். மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் அவரை காணவில்லை என திவ்யா குடும்பத்தினர், குருகிராம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங் உடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால், திவ்யாவை, அபிஜித் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.