ஜாதி சான்று வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பு: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியத்தால் பழங்குடியினர் அவதி
ஜாதி சான்று வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பு: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியத்தால் பழங்குடியினர் அவதி
ஜாதி சான்று வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பு: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியத்தால் பழங்குடியினர் அவதி
ADDED : மே 12, 2025 01:52 AM

சென்னை: பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், மானுடவியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, விண்ணப்பங்களை ஆர்.டி.ஓ.,க்கள் ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்திருப்பதால், அவர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
பழங்குடியினர் சமூகத்தினர், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்கான 1 சதவீத இட ஒதுக்கீட்டை பெறவும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறவும் ஜாதி சான்றிதழ் அவசியம்.
வழங்குவதில்லை
ஆனால், பழங்குடியின மக்கள், ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், தாசில்தார், ஆர்.டிஓ., உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், உடனடியாக சான்றிதழ் வழங்குவதில்லை. உண்மை தன்மையை கண்டறிய, மானுடவியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் எனக்கூறி, விண்ணப்பங்களை நிலுவையில் வைத்து விடுவதாக, பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சான்றிதழ் கிடைக்காததால், அவர்கள் அரசின் சலுகைகள் எதையும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, விளிம்பு நிலை பழங்குடி நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் கதர், கம்மாரா, கணியன் உள்ளிட்ட 37 வகை பழங்குடியினர் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணத்திற்காக, அவர்களில் சிலர் மலைப் பகுதிகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்திற்கு வந்தனர்.
அவ்வாறு வந்தவர்களில் ஆதியன், இருளர், மலைக்குறவர், நரிக்குறவர், மலையாளி சமூகத்தினர், நாடோடிகளாக உள்ளனர். இவர்களின் அடிப்படை தேவை ஜாதி சான்று. ஆனால், இச்சமூகத்தினர் தற்போது வரை பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் பெற போராடி வருகின்றனர்.
மானுடவியல் ஆய்வு
எஸ்.சி., - எம்.பி.சி., - பி.சி., - ஓ.பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர், ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆனால், எஸ்.டி., பிரிவினர், பழங்குடியினர் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், மானுடவியல் ஆய்வு உள்ளிட்ட காரணங்களை கூறி, ஆர்.டி.ஓ.,க்கள் ஆண்டுகளை கடத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர், ஹிந்து - ஆதியன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி, 2023ல் விண்ணப்பித்தனர். இதுவரை அவர்களுக்கு திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., சான்றிதழ் வழங்கவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விண்ணப்பதாரரின் இனத்தை கண்டறிய முடியாததால், மானுடவியல் ஆய்விற்கு உத்தரவிட்டு உள்ளோம்' என்றனர்.
அதற்கான ஆணையிடப்பட்டு ஓராண்டாகியும், மானுடவியல் துறையினர் ஆய்வு நடத்தவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் இல்லை.
1,000 விண்ணப்பம்
இதேபோல், கடலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 1,000 விண்ணப்பங்கள், மானுடவியல் ஆய்வு என நிலுவையில் உள்ளன.
இதனால், குழந்தை திருமணம், பள்ளி இடைநிற்றல் என்பது இச்சமூக மக்களிடையே அதிகரித்துள்ளது. சிலர் வேறு வழியின்றி, எஸ்.சி., - ஓ.சி., உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
எனவே, பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தி, நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பதார்களுக்கும், பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.