Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இளவட்டக்கல் துாக்கும் போட்டி வள்ளியூர் அருகே பயிற்சி தீவிரம்

இளவட்டக்கல் துாக்கும் போட்டி வள்ளியூர் அருகே பயிற்சி தீவிரம்

இளவட்டக்கல் துாக்கும் போட்டி வள்ளியூர் அருகே பயிற்சி தீவிரம்

இளவட்டக்கல் துாக்கும் போட்டி வள்ளியூர் அருகே பயிற்சி தீவிரம்

ADDED : ஜன 11, 2024 09:47 PM


Google News
ராதாபுரம்:தமிழர்களின் பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்புடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு இணையாக இளவட்டக்கல் துாக்கும் போட்டியில் ஆண்கள் பெண்களின் சாகசம் குறித்த பயிற்சி வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் அரங்கேறி வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் துாக்கும் போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை செய்து வருவது நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகைதோறும் நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் குறிப்பாக பாண்டிய நாட்டில் இளவட்டக் கல்லை துாக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் துாக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்ததும் அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது.

நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றுார்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் துாக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

கல்யாணக் கல்


இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 45, 60, 80 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும். முழு உருண்டையாக வழுக்கும்தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும்.

இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.

முதலாவது குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர், முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை மார்பின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.

பரிதாபம்


தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இளவட்டக் கற்கள் இன்றைக்கு பல கிராமங்களில் தம்மைத் துாக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்து கிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது.

இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் துாக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பங்குபெற ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரல் போட்டி



அதுபோல் நடைபெற இருக்கும் உரல் துாக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தயார் நிலையை எட்டி வருகின்றனர். இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் துாக்கி நிறுத்தி வைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. வரும் 16ம் தேதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பயிற்சிகள் வேகம் எடுத்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us