மாநிலம் முழுதும் சீரான வளர்ச்சியே லட்சியம்: ஸ்டாலின்
மாநிலம் முழுதும் சீரான வளர்ச்சியே லட்சியம்: ஸ்டாலின்
மாநிலம் முழுதும் சீரான வளர்ச்சியே லட்சியம்: ஸ்டாலின்
ADDED : ஜன 08, 2024 05:53 AM

சென்னை : ''உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு மழையாக பெய்யும். தமிழகம் முழுதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், எங்களுடைய லட்சியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024ஐ நேற்று துவக்கி வைத்து, ஸ்டாலின் பேசியதாவது:
பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான், நான், 'சூட்' போடுவது வழக்கம். எல்லா வெளிநாடுகளும், தமிழகத்திற்குள் வந்து விட்டதால், இங்கே 'கோட் சூட்' அணிந்து வந்துள்ளேன். காலையில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது.
இங்கு வந்ததும், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில் வளமும் உடைய மாநிலம் தமிழகம். பண்டைய காலத்தில் இருந்து, கடல் கடந்து தமிழர்கள் வாணிபம் செய்தனர்.
பொருளாதார வளர்ச்சியில், அதிவிரைவு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் வழியே, தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்து கொடுக்கும்.
'தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற கருப்பொருட்களில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு தமிழகம் தான்' என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலக்கு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில், தமிழகம் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்த குறிக்கோளோடு, 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக, அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது; வேலை வாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என, இருமுனை அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறோம்.
ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமெனில், மாநில ஆட்சியின் மேல் நல்லெண்ணம் இருக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவ வேண்டும்.
ஆட்சியாளர்கள் மேல் உயர் மதிப்பு இருக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
கடந்த, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது. முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பை முன்பே கணித்து, தமிழக அரசு செயல்படுகிறது.
'நான் முதல்வன்' திட்டம் வழியே, மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம்.
பெண்களுக்கு சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் ரீதியாக அதிகாரம் அளிக்கின்ற திட்டங்களை, இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பது, திராவிட மாடல் அரசின் முழக்கம்.
தொழில் வளர்ச்சிக்காக, பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், எங்கள் லட்சியம். அதனால் தான் தொழில் திட்டங்கள் எல்லாம், மாநிலம் முழுதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன.
திறமையானவர்கள்
பல பின் தங்கிய மாவட்டங்களில், பெரும் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, முதலீட்டு திட்டங்கள் ஈர்க்கப்பட்டு உள்ளன.
இதன் வழியே இளைஞர்கள், மகளிர், அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்புகள் பெறுவதுடன், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த பணியாளர்கள், மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான, அனைத்து ஆதரவுகளையும், தமிழக அரசு அளித்து வருகிறது.
அனைத்து துறைகளிலும், தமிழகத்தை முதன்மை பெறச் செய்ய, உறுதி கொண்டுள்ளோம். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே, எங்கள் லட்சியம்.
தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம்; ஒட்டுமொத்த தமிழகத்தின் கனவை நனவாக்குவோம் வாருங்கள்.
தமிழக அரசு உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும். உங்களுடைய உணர்வுகளை மதிக்கும்.
தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் செய்யும். வாருங்கள்; முதலீடு செய்யுங்கள். தமிழகத்தின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும், உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.