Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: திருமாவளவன், சீமான் கண்டனம்!

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: திருமாவளவன், சீமான் கண்டனம்!

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: திருமாவளவன், சீமான் கண்டனம்!

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: திருமாவளவன், சீமான் கண்டனம்!

UPDATED : மார் 24, 2025 07:04 PMADDED : மார் 24, 2025 05:52 PM


Google News
Latest Tamil News
சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை;

சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், அங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. தி.மு.க., அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது.

எனவே, தமிழக அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதேபோல காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டுள்ளவர்களை தமிழக காவல்துறை கண்டறிந்து வழக்குப்பதிய வேண்டும். இல்லையெனில் காவல்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சிதைக்கப்பட்டு விடும் என்று கூறி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமூக விரோதக் கும்பல் பட்டப்பகலில் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மனிதக் கழிவையும், சாக்கடையையும் வீடு முழுக்கக் கொட்டியதோடு, வீட்டை சூறையாடி, சங்கருக்கும், அவரது தாயாருக்கும் அச்சுறுத்தல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆளும் திமுக அரசுக்கு எதிரானக் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார் சங்கர் என்பதற்காகவே, அவரைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகப் பழிவாங்கும் போக்கு மிக மலினமான அரசியலாகும். அவர் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து, சிறைக்குள் தாக்குதல் தொடுத்து, கையை உடைத்து, இருமுறை குண்டர் சட்டத்தைப் பாய்ச்சிய திமுக அரசு, தற்போது அவரது வீட்டுக்குள் தாக்குதல் நடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சமாகும்.

மாற்றுக்கருத்து முன்வைப்பவர்களையும், அரசியலில் எதிர்முகாமைச் சேர்ந்தவர்களையும் எதிரியாகப் பாவித்து, அவர்கள் மீது அதிகாரத்தைக் கொண்டு மீது அடக்குமுறையை ஏவுவதும், சமூக விரோதிகளின் மூலம் அச்சுறுத்த முனைவதுமான இத்தகைய செயல்பாடுகள் வெளிப்படையான ஜனநாயகப்படுகொலையாகும்.

சங்கர் தனது வீட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதை காவல்துறைக்குத் தெரிவித்தும்கூட அவர்களை உடனடியாகக் கைதுசெய்யாது வேடிக்கைப் பார்த்த செயல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சரிநிகர் சான்றாகும். ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி இல்லாமல், காவல்துறையின் துணையில்லாமல் இத்தகைய தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

எல்லோராலும் அறியப்பட்ட சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கே இந்நிலையென்றால், பொது மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? வெட்கக்கேடு!

நான்காண்டு கால ஆட்சி! நாற்றமெடுக்கும் நாசகார ஆட்சி! சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடைக்கழிவுகளே அதற்குச் சாட்சி!இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us