Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

திருமாவளவன் - வைகை - நாகேந்திரன் ஒரே ஹோட்டலில் சந்திப்பு; நடந்தது என்ன?

UPDATED : ஜூன் 17, 2025 10:25 PMADDED : ஜூன் 17, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: திருச்சியில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

கடந்த ஏப்., 11ல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. 'கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்; தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார்.

கூட்டணி ஆட்சி


அதேபோல, 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரும்' என சில நாட்களாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

இதற்கிடையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், கூடுதல் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., விட்டுக்கொடுக்க வேண்டும்' என, மா.கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் கூறி வருகிறார்.

வி.சி., தலைவர் திருமாவளவனும், 'கடந்த சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டதைவிட, அதிக தொகுதிகளை வி.சி.,க்கள் போட்டியிட தி.மு.க., தலைமையிடம் கேட்போம்' என தெரிவித்து வருவதோடு, 'அடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும்.

அதுதான் வி.சி.,க்களின் நிலைப்பாடு; இதைத்தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்' என மேடை தோறும் சொல்லி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி, வி.சி., சார்பில் நடந்த, 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பேரணிக்காக திருச்சி வந்த திருமாவளவன், அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார்.

அதே ஹோட்டலில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோரும் தங்கி இருந்தனர்.

அப்போது, நயினார் நாகேந்திரனை சந்தித்த வைகைசெல்வன், அவருக்கு, தான் எழுதிய 'உலக நாகரிகங்களில் ஓர் உலா' என்ற புத்தகத்தை வழங்கினார்.

பிறகு, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

அதிருப்தி


அதைத் தொடர்ந்து, அதே ஹோட்டலில் தங்கியிருந்த வி.சி., தலைவர் திருமாவளவனை, வைகை செல்வன் சந்தித்தார்.

அவருக்கு, தான் எழுதிய 'பேசு பேசு நல்லா பேசு' என்ற புத்தகத்தை வைகைசெல்வன் வழங்கினார். பின்னர், இருவரும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்து, 30 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:


பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சி தலைமையோடு, வி.சி.,க்களுக்கு சுமூகமான உறவு இல்லை.

அதனால், அ.தி.மு.க., கூட்டணிக்கு வி.சி.,க்கள் வந்தால், கூட்டணி வலுப்பெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைக்கிறார். அதற்காக, திருமாவளவனிடம் பேசுமாறு கட்சியினரை உசுப்பி விட்டுள்ளார்.

அதனால், தி.மு.க., கூட்டணியை விட்டு வி.சி.,க்கள் விலகினால், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் தான், வைகைசெல்வன், திருமாவளவனை சந்தித்து பேசி உள்ளார். இது யதார்த்தமாக நடந்த சந்திப்புதான் என்றாலும், தி.மு.க., தலைமை மீது திருமாவளவனுக்கு இருக்கும் அதிருப்தி, வி.சி.,க்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பழனிசாமியின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வெற்றிப் பயணம்


கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் தனக்கு போதுமான எண்ணிக்கையில் 'சீட்'கள் ஒதுக்கவில்லை என்ற அதிருப்தியில், கூட்டணியில் இருந்து விலகிய திருமாவளவன், எச்சில் இலையில் பரிமாற்றம் நடக்கிறது என கடுமையான விமர்சனத்தை வைத்துவிட்டு, அ.தி.மு.க., பக்கம் சென்றார்.

அங்கே, வி.சி.,-க்களுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னரே, தமிழக தேர்தல் அரசியலில் வி.சி.,க்கள் வெற்றிப் பயணம் துவங்கியது.

இந்த விபரங்களையெல்லாம் தன் சந்திப்பின் போது, திருமாவளவனிடம் நினைவுகூர்ந்த வைகைசெல்வன், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us