Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

ADDED : ஜூன் 20, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
சென்னை: வாடிக்கையாளர்கள் வராததால், கடை வாடகை உள்ளிட்ட செலவை சமாளிக்க, முதல்வர் மருந்தகத்தில் பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்து, மாத்திரைகள் கிடைக்க, மாநிலம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை, பிப்ரவரியில் அரசு துவக்கியது. இதில், 462 மருந்தகங்களை, தனியார் தொழில் முனைவோர் நடத்துகின்றனர்; 538 மருந்தகங்களை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.

75 சதவீதம் குறைவு


இந்த மருந்தகங்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள், வெளிச்சந்தையை விட 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பல மருந்தகங்களில் நோயாளிகள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால், மருந்தகம் நடத்தும் செலவை சமாளிக்க, உணவு பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன.

இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:

ஏழை மக்கள் பயன் பெற, முதல்வர் மருந்தகம் என்ற நல்ல திட்டத்தை அரசு துவக்கியது. கடை உள்கட்டமைப்பு பணிகளுக்கு அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் போதவில்லை. மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் மருந்தகங்களை நடத்துகின்றன; அவற்றில் தள்ளுபடி வழங்கப்படுவதுடன், அனைத்து வகை மருந்துகளும் விற்கப்படுகின்றன.

இதனால், ஒரு முறை கடைக்கு செல்வோர், ஒரு வாரம், மாதத்திற்கான மருந்துகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

முதல்வர் மருந்தகத்தில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகளில் ஒன்று இருந்து, மற்றொன்று இல்லை என்றாலும், இருக்கிற ஒன்றை கூட வாங்காமல் சென்று விடுகின்றனர். இது தொடர்பாக, கூட்டுறவு துணை, இணை பதிவாளர்களிடம் புகார் அளித்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.

உணவு பொருட்கள்


ஒரு முறை மருந்து கிடைக்காமல் திரும்பிச் சென்றவர்கள், மீண்டும் வருவதே கிடையாது. மருந்தக வாடகை, 'பிரிஜ்' உள்ளிட்ட மின் கட்டண செலவுகளை சமாளிக்க முடியவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை.

எனவே, செலவுகளை சமாளிக்க மருந்து மட்டுமின்றி, பால் பவுடர், மாவு வகை, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதல்வர் மருந்தகத்தில் விற்பனை அதிகரித்து வருகிறது; கூடுதல் மருந்து விற்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆர்வம் இல்லாத அதிகாரிகள்

தமிழகம் முழுதும் 35,000 ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. அவற்றில் மாதம் இரண்டு கோடி குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் என்னென்ன மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து, அவற்றை வாங்கி அவர்களிடம் விற்றாலே, மக்களுக்கு பயன் கிடைக்கும்; கூடுதலாக முதல்வர் மருந்தகம் திறக்க வாய்ப்பு ஏற்படும். இதை செயல்படுத்த, கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு ஆர்வம் இல்லை என்று, முதல்வர் மருந்தக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us