Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நொய்யல் நீரில் உப்பின் அளவு குறைகிறது!

நொய்யல் நீரில் உப்பின் அளவு குறைகிறது!

நொய்யல் நீரில் உப்பின் அளவு குறைகிறது!

நொய்யல் நீரில் உப்பின் அளவு குறைகிறது!

UPDATED : மே 28, 2025 01:52 PMADDED : மே 28, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், திருப்பூரில் நொய்யல் நீரில் உப்பின் அளவு குறைந்து வருகிறது.

நொய்யலாற்றில் வழக்கமாக மிக குறைந்தளவே தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் மற்றும் முறைகேடு நிறுவனங்கள் அவ்வப்போது திறந்து விடும் கழிவு காரணமாக, நொய்யல் நீரின் டி.டி.எஸ்., (கரைந்துள்ள மொத்த உப்புக்களின் அளவு), 2,000 டி.டி.எஸ்.,க்கு மேல் இருக்கும்.

மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து தற்போது, நொய்யலாற்றின் டி.டி.எஸ்., குறைந்துவருகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியபடி, பொது சுத்திகரிப்பு மையத்தினர், தங்கள் பகுதியில், நொய்யலாற்று நீரை சேகரித்து, தினமும் டி.டி.எஸ்., பரிசோதித்துவருகின்றனர். அந்தவகையில், நேற்று காசிபாளையம் பகுதியில், டி.டி.எஸ்., 1400 ஆக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, டி.டி.எஸ்., 600 ஆக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உஷார்

திருப்பூரில் பின்னல் துணிகளுக்கு சாயமேற்றும் 450 சாய ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில், 350 ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் மூலமாகவும்; 100 சாய ஆலைகள், தனிநபர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உள்ளடக்கியும் செயல்படுகின்றன.

பொது சுத்திகரிப்பு மையம் - சாய ஆலைகளுக்கு இடையிலான குழாய்கள், நொய்யலாற்றினுள் அமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் அதிக அழுத்தம் காரணமாக, குழாய்களில் உடைப்பு, மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டு சாயக்கழிவுநீர் வெளியேறி நொய்யலாற்றில் கலந்துவிடுகிறது.

நொய்யலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாய ஆலைகளிலிருந்து சாயக்கழிவுநீர், சுத்திகரிப்பு மையத்துக்கு பம்பிங் செய்யப்படும்போது, குழாய்களில் ஏதேனும் உடைப்பு ஏற்படுகிறதா; மேன்ஹோல்களில் கசிவு ஏற்படுகிறதா என தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும். குழாய் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக பம்பிங்கை நிறுத்தி, சரி செய்யவேண்டும்.

சுத்திகரிப்பு மையங்களில், சாயக்கழிவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கலவை உப்புக்களை, மேற்கூரை மற்றும் தளம் அமைக்கப்பட்ட குடோன்களில், மழை நீர் புகாதவாறு வைக்கவேண்டும்.

சாயக்கழிவுநீர் தேக்க தொட்டிகளில் கசிவு இருக்கக்கூடாது; மழை நீர் நிரம்பி, சாயக்கழிவுநீர் நிரம்பி வழிந்து வெளியேறிவிடக்கூடாது. மழைால் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டாலும்கூட, தெரிந்தோ, தெரியாமலோ எந்தவகையிலும், சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களிலிருந்து, சாயக்கழிவுநீர் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சாய ஆலை, சுத்திகரிப்பு மையம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை தீவிர ஆய்வு

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத, முறைகேடு சாய ஆலைகள் ஆங்காங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடிகளில் ரகசியமாக இயங்கும் சாய ஆலைகள், பட்டன் - ஜிப் டையிங் நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை, சரியான நேரம் பார்த்து அருகிலுள்ள நீர் நிலைகளில் திறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

தண்ணீரோடு தண்ணீராக, சாயத்தை திறந்துவிட்டால் தெரியாது என்பதால், விதிமீறல் நிறுவனங்களுக்கு, நொய்யலில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், அத்துமீறல் ஆலைகளை பிடிப்பதற்காக, நொய்யலாறு மற்றும் ஜம்மனை, சங்கிலிப்பள்ளம், சின்னக்கரை ஓடை உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளில் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us