Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒரு கிராம் தங்கம் விலை... ரூ.10,005 சாமானிய மக்கள் அதிர்ச்சி

ஒரு கிராம் தங்கம் விலை... ரூ.10,005 சாமானிய மக்கள் அதிர்ச்சி

ஒரு கிராம் தங்கம் விலை... ரூ.10,005 சாமானிய மக்கள் அதிர்ச்சி

ஒரு கிராம் தங்கம் விலை... ரூ.10,005 சாமானிய மக்கள் அதிர்ச்சி

ADDED : செப் 06, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
சென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் கிராம் விலை, 10,005 ரூபாய்க்கும்; சவரன் விலை, 80,040 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு, ஏழை மக்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தங்க நகை அடமானத்திற்கு உடனடி கடன் கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க பாதுகாப்பான முதலீடாக தங்கம் உள்ளது.

இதனால், அதன் விலை உயர்ந்தாலும், மக்கள் வாங்குகின்றனர். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து, தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,865 ரூபாய்க்கும், சவரன் 78,920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 136 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 10,005 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து, 80,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்தளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பது, திருமண வீட்டார், பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், நகை பிரியர்கள், ஏழை மக்கள் என, பலரிடமும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். வரும் காலங்களில், அமெரிக்க டாலரின் மதிப்பு, வீழ்ச்சியை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதனால், பல நாடுகளும் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணியை, தங்கமாக மாற்ற துவங்கி உள்ளதுடன், தங்களின் கருவூலங்களிலும் தங்கத்தின் இருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும், சர்வதேச சந்தையில், 31.1 கிராம் எடை உடைய 'அவுன்ஸ்' தங்கம் விலை, 50 டாலர் அதாவது, 4,300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், நம் நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இறுதியில், தங்கம் விலை பெரிய உச்சத்தில் இருக்கும். வழக்கமாக, ஓராண்டில் தங்கம் விலை சராசரியாக, 30 - 35 சதவீதம் உயரும். ஆனால், இந்தாண்டில், ஆண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே தங்கம் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



9 மாதங்களில் மட்டும் ரூ.22,840 உயர்வு


தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 1ல் தங்கம் கிராம் 7,150 ரூபாய்க்கும், சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, இந்தாண்டில் நேற்று வரை கிராமுக்கு 2,855 ரூபாயும், சவரனுக்கு 22,840 ரூபாயும் அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us