விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு
விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு
விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு

சென்னை: வீடு, விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்காக, 2024 - 25ல், 15,785 கோடி ரூபாயை, மின் கட்டண மானியமாக மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
விவசாயம், குடிசை வீடுகளுக்கு, முழுதும் இலவசமாகவும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும், அந்த ஆண்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு மானியம் விடுவிக்க வேண்டும் என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், உத்தேசமாக அரசுக்கு தெரிவிக்கும். பின், நிதியாண்டு முடிவடைந்ததும், துல்லியமான மானியம் இறுதி செய்யப்படும்.
அதன்படி, 2024 - 25ல், 15,852 கோடி ரூபாயை, உத்தேச மானியமாக வழங்க ஆணையம் உத்தர விட்டது. இதை நான்கு தவணைகளாக அரசு வழங்கியுள்ளது.
மானிய ஆவணங்களை பரிசீலித்த ஆணையம், தற்போது, 15,785 கோடி ரூபாயை மானியமாக இறுதி செய்துள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட, 67 கோடி ரூபாயை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கு பெற வேண்டிய மானியத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு, மின்வாரியத்துக்கு தெரிவித்துள்ளது.