'வாக்காளர்களுக்கு வெகுமதி தருவதை தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது!'
'வாக்காளர்களுக்கு வெகுமதி தருவதை தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது!'
'வாக்காளர்களுக்கு வெகுமதி தருவதை தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது!'
ADDED : பிப் 25, 2024 01:11 AM

சென்னை:''ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு வெகுமதி வழங்குவதை, தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது. பணப் பட்டுவாடாவை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ராஜிவ்குமார் தலைமையில், கடந்த இரண்டு நாட்களாக, சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதுகுறித்து, ராஜிவ்குமார் நேற்று அளித்த பேட்டி:
பெரும்பாலான கட்சிகள், 'பணபலத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணம் வினியோகம் செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தின.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஒருதலைபட்சமாக நடக்கக்கூடாது. தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்த வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. பண பட்டுவாடா முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டிப்புடன் தெரிவித்துள்ளோம்.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன; 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் அதிகம். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களில், 9.18 லட்சம் பேர், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 65 ஆயிரம் விண்ணப்பங்கள், 17 வயது உள்ளவர்களிடம் இருந்து வந்துள்ளன. அவர்கள் வயது 18 ஆகும்போது சேர்க்கப்படுவர். ஓட்டுச்சாவடிகள், 68,144 உள்ளன. இவற்றில், 66 சதவீத ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட உள்ளது. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சாய்தளம், சக்கரநாற்காலி வசதிகள் இருக்கும்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள், 'சி விஜில்' மொபைல் போன் செயலி வழியாக புகார் தெரிவிக்கலாம். இது குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும்.
மாநில எல்லைகள் உள்ளிட்ட பகுதிகளில், 145 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் செயலாக்கத் துறைகளுடன் இணைந்து சோதனைகள் நடத்தப்படும்.
மதுபானம், இலவச பொருட்கள் வினியோகம் கண்காணிக்கப்படும். ஏ.டி.எம்., மையங்களுக்கு மாலை 6:00 மணிக்கு மேல், பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படாது. அனைத்து மத்திய, மாநில அமலாக்கத் துறை, வாரம் ஒரு முறை, சோதனை குறித்து அறிக்கை அளிக்கும்.
அனுமதிகள் பெற, ஒற்றை சாளர முறை உருவாக்கப்படும். ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு 'பூத் சிலிப்' வழங்கப்படும். பணம் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படுவதை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'ஆன்லைன்' வழியாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவது கண்காணிக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு, விதிமுறைகளின்படி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. 'விவிபேட்' ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளோம். அதன் விபரம், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.